பக்கம்:மேனகா 1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

மேனகா

ஒருநாளைக்கு இருக்க வசதியான இடங்கொடுக்காத அந்த ஊர்ப்புருஷரை என்னவென்று சொல்வது அந்த ஊரிலுள்ளவர் தங்கள் மனைவி மார்களையாவது வசதியான இடத்தில் வைத்திருக்கிறார்களா? அல்லது, அவர்களை யெல்லாம் அங்கே இடமில்லை யென்று அவரவர்களுடைய தாய் வீட்டிலேயே விட்டுருக்கிறார்களா?” என்று பரிகாசமாகக் கூறிப் புன்னகை செய்தாள்.

வரா:- நீ இங்கே ஒரு குறைவு மில்லாமல் செளக்கியமா யிருப்பதை விட்டு வண்டியில் கண் விழித்து அங்கே வந்து ஏன் துன்பங்களை அநுபவிக்க வேண்டும்? ஒரு நாள் ஒரு நொடியில் கழிந்து போம். கவலைப் படாதே!

மேனகா:- நீங்கள் அவ்வித வருத்தங்களுக்கு ஆளாகும் போது நான் மாத்திரம் உயர்வா? வருத்த மெல்லாம் உங்களுக்கு, சுக மெல்லாம் எங்களுக்கோ? நாங்கள் மாத்திரம் வெயிலையே அறியாமல் நிழலிலேயே இருக்கப் பிறந்திருக்கிறோமா? நானும் வந்தால் துன்பம் ஆளுக்குப் பாதியாய்ப் போகுமே - என்றாள்.

வரா:- எங்களுக்கு அவ்வளவு துன்பம் தோன்றாது. நாங்கள் போஜன சாலையில் நூறு ஆண் பிள்ளைகளுடன் உட்கார்ந்து சாப்பிடுவோம்; நினைத்த இடத்தில் படுக்கையை விரித்து விடுவோம். ஸ்திரீகளுக்கு அது சரிப்படுமா! பாதக மில்லை. நீ இரு; வருத்தப்படாதே; வண்டிக்கு நாழிகை யாகிறது. நான் போய் விட்டு வருகிறேன் - என்று அவளை இன்னொருமுறை ஆலிங்கனம் செய்தான். அவள் அவனைத் திரும்பவும் இறுகப் பிடித்துக்கொண்டு, “நான் உங்களை விடமாட்டேன். குற்றவாளியே தன் கேசை எடுத்துச் சொல்லிக் கொள்ளட்டும். அவனுடைய நியாயம் அவனுக்குத் தெரியா விட்டால் அதற்காக நானா இங்கே துன்பப் படுகிறது?” என்று வேடிக்கையாக நகைத்துக் கொண்டே மொழிந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/74&oldid=1248704" இலிருந்து மீள்விக்கப்பட்டது