பக்கம்:மேனகா 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

மேனகா

பெருந்தேவியம்மாள் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு, “ஏனடா சாமா! வண்டிவந்தால் என்னடா நிற்கட்டுமே; என்ன அவசரம்? ஊருக்குப் புறப்படுவ தென்றால் சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லிக்கொண்டு, பணமோ காசோ எடுத்துக்கொண்டு தானே வரவேண்டும். வண்டிக்காரனுக்கு முன்னால் உனக்கு அவசரமாடா! எட்டு மணி ரயிலுக்கு இப்போதே என்ன அவசரம்? மணி ஏழேகால் தானே ஆகிறது” என்று வராகசாமியின் காதிற்படும் வண்ணம் கூறினாள்.

சாமா:- (புன்சிரிப்போடு) வண்டிக்காரனுக்காக அவசரப்படுத்த வில்லை. நாழிகை ஆய்விட்டது; ரயில் தவறிப் போனால் கேஸ் பாழாய்ப் போய் விடும். உனக்கென்ன கவலை யம்மா! வீட்டிற்குள் இருப்பவள். கேஸின் அவசரம் உனக்கெப்படி தெரியப் போகிறது!- என்று உரக்கக் கூவினார்.

உடனே மேனகா, “சரி சம்மன் வந்து விட்டது. போய் விட்டு வாருங்கள். ரயில் தவறிப்போனால், சேலம் குற்றவாளியோடு நானும் இன்னொரு குற்றவாளி ஆகி விடுவேன். போய் விட்டு வாருங்கள்; வரும்போது எனக்கு என்ன வாங்கி வருவீர்கள்?” என்றாள். அவ்வாறு அவள் சலிப்பாக மொழிந்ததும் ஒர் அழகாய்த் தோன்றியது

வரா:- சேலத்தில் முதல் தரமான மல்கோவா மாம்பழம் இருக்கிறது. அதில் ஒரு கூடை வாங்கி வருகிறேன் - என்று கடைசியாக அவளை இழுத்து ஆலிங்கனம் செய்து முத்தமிட்டான்.

அப்பெண்மணி கொடி போல அவனைத் தழுவிய வண்ணம், “எந்த மல்கோவாவும் இந்தச் சுகத்துக்கு இணை யாகுமோ இதைக் கொண்டு வந்தால் போதும்” என்றாள்.

வரா:- எதை?

மேனகா:- தாங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பாகிய பழத்தை வட்டியும் முதலுமாக ஒரு வண்டியளவு கொண்டு வாருங்கள். ஒரு கூடையளவு போதாது - என்று மெதுவாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/76&oldid=1248717" இலிருந்து மீள்விக்கப்பட்டது