பக்கம்:மேனகா 1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மேனகா

இருப்போமானால், அவருக்கு நம்மீது கோபம் பிறக்கும். ஆதலால், அவரைப் பற்றிய விவரத்தை நாம் சிறிது அறிந்து கொள்வோம்.

அவர் எந்த விஷயத்திலும் எதிர்மறையான கொள்கை களைக் கொண்டவர் முரண்களுக்கே இருப்பிடமானவர். அவர் தோற்றத்தில் ஒரு விதமாயும், உண்மையில் வேறு விதமாயும் இருப்பவர். அவர் வயதில் முதுமையடைந்தவர் அல்லர்; ஆனால், தலையின் உரோமமோ முற்றிலும் வெளுத்திருந்தது. அவருடைய மேனி பறங்கிப்பழம் போலச் சிவந்திருந்தது; மனதோ களாப்பழத்திலும் அதிகமாய்க் கறுத்திருந்தது. சொற்களோ தேனும்பாலுமாய் ஓடின; செயல்களோ எட்டிப்பழங்களாய் உதிர்ந்தன. அகமோ ஆழந்தெரியா அகழியாய் இருந்தது; முகமோ கண்களையும், மனதையும் குளிரச் செய்து, கவரும் வண்ணம் அந்த அகழியின் மீது மலரும் தாமரைப்பூவை யொத்திருந்தது. வாயில் வருவது இன்சொல்; நெஞ்சில் மறைந்திருப்பது வஞ்சம்; புரிய முயல்வது பொல்லாங்கு. கடைவாயில் காலகோடி விஷத்தை ஒளிய வைத்துள்ள நாகப்பாம்பு பரம பக்தனைப்போல நெற்றியில் திருநாமம் அணிந்திருப்பதை நாம் காண்கிறோம் அல்லவா. அவ்வாறே தாந்தோனிராயருடைய கழுத்தில் உத்திராட்சம், நெற்றியில் விபூதி, குங்குமம், அட்சதை முதலிய பக்த அலங்காரம்; அதிகாலை தொடங்கி பகல் பன்னிரண்டு மணிவரையில் சிவபூஜை, காதில் வில்வப்பத்திரம், ஆனால் சுவாமி வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை நோக்கி, அர்ச்சனை நிவேதனம், ஸ்தோத்திரம் முதலியவை செய்யும்போதே இப்புறம் தன் மனைவியைப் பார்த்துக் கண் சிமிட்டித் தாம் ஈசுவரனிடம் பாசாங்கு செய்து அவனை ஏமாற்றுவதாய்ச் சைகை காட்டக் கூடிய மனப்பான்மை உடையவர். அவருடைய கைகள் பிறரிடம் பெறுதலை அறியுமன்றி கொடுத்தலை அறிந்தனவன்று. அவருடைய நாவிற்குப் பிறர் வீட்டுச் போஜனத்தில் விருப்பம் அதிகமன்றித் தமது வீட்டுச் சோற்றில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/94&oldid=1249171" இலிருந்து மீள்விக்கப்பட்டது