பக்கம்:மேனகா 2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

211

படித்துப்பார்த்து திருப்தி அடைந்தவராய், அதை மடித்துத் தமது சட்டைப்பையில் வைத்துக்கொண்டார்; சாமாவையருக்கு நைனாமுகம்மது எழுதியனுப்பிய கடிதத்தையும், பெரியதம்பி மரக்காயரின் பிரியாதையும் வாங்கி சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு, “சரி; எஜமான் காத்திருப்பார்; நான் போகிறேன். நாளைக்கு எல்லாக் காரியமும் திருப்தியாய் முடிந்துபோகும். சலாம்" என்று சொல்லிவிட்டு எழுந்தார். சாமாவையரும் அவருக்கு சலாம் செய்தார். உடனே எழுந்து வெளியிற் சென்ற மந்திரவாதி திரும்பவும் நடைக்கு வந்து, “ஐயரே இன்னொரு விஷயம் கேட்டுவரச் சொன்னார்; அதை மறந்துவிட்டேன்” என்றார்.

சாமாவையர் ஆவலோடு, “என்ன விஷயம்?” என்றார்.

மந்திரவாதி, “பெண்ணினுடைய பெட்டியில் நீங்கள் நாடகக் காரன் எழுதியதைப்போல இரண்டு கடிதங்களை எழுதி வைத்தீர்களே, அவைகளை எழுதிய மனிதரை நாம் கடைசி வரையில் நம்பலா மல்லவா? அவர் ஒருவேளை விஷயத்தை வெளியிட்டு விடப் போகிறாறென்று எஜமான் பயப்படுகிறார்; அவர் சொல்லிவிடக் கூடியவரானால் அவருடைய பெயரைச் சொல்லும். இன்று ராத்திரியே மரணமந்திரம் செய்து அவரைக் கொன்றுவிடுகிறேன்” என்றார். அதைக் கேட்ட சாமாவையர், “இல்லை இல்லை; அதைப் பற்றி பயமே வேண்டாம். அதை எழுதியது வேறுயாருமில்லை. என் தம்பிதான் எழுதினான். உயிர் போனாலும் அவன் நிஜத்தைச் சொல்லமாட்டான். எஜமானிடம் தைரியமாகச் சொல்லுங்கள். அவர் எங்கு மறைந்து கொண்டிருக்கிறார்? அவரிடம் நானும் வரலாமா?” என்றார்.

மந்திரவாதி, “அவர் நாளைக்குக் காலையில் தம்முடைய வீட்டுக்கே பகிரங்கமாக வந்துவிடுவார்; நீர் வீட்டுக்கே வந்து பார்க்கலாம்; இன்றைக்கு ஒரு நாள் பொருத்துக் கொள்ளும்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/212&oldid=1252387" இலிருந்து மீள்விக்கப்பட்டது