பக்கம்:மேனகா 2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

மேனகா

என்று சொல்லிக் கொண்டே வெளியில் போய்விட்டார். விஷயங்கள் யாவும் திருப்திகரமாக நடந்து போனதைப் பற்றி சாமாவையர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, பகற் போஜனம் செய்யும் பொருட்டு வீட்டிற்குள் போய் விட்டார்.

அவரது வீட்டை விட்டு வெளிப்பட்ட மந்திரவாதி கெங்கைகொண்டான் மண்டபத்திற்கு எதிரில் திரும்பிச் சிறிது தூரம் சிங்கராசாரி தெருவில் போய் அங்கிருந்து வெங்கடாசலக் செட்டித் தெருவிற்குள் நுழைந்தார்; அதிலிருந்த பல மாடி வீடுகளைக் கடந்தார். அப்பாலிருந்த ஒரு வீட்டிலேதான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமய சஞ்சீவி ஐயர் குடியிருந்தார் என்பதை மந்திரவாதி அறிவார். ஆதலின், அந்த வீட்டிற்குள் புகுந்து நடையைத் தாண்டி தாழ்வாரத்தில் நின்றுகொண்டு, “சாமி! சாமி!” என்று கூப்பிட்டார். “யார் அது?” என்று குயில் கூவுதலைப் போல ஒரு பெண்ணின் குரல் உட்புறத்தில் கேட்டது. அடுத்த நிமிஷம், தங்கப்பதுமைப்போன்ற வடிவழகினைக்கொண்ட ஒரு யெளவனப் பெண்மணி மந்திரவாதிக்கு எதிரில் பிரசன்னமானாள். அவளுக்குப் பதினெட்டு வயதிருக்கலாம்; தங்கமும், வைரக்கற்களும், பட்டுத்துயிலும், சிவப்பு மேனியும், முல்லையரும்பு போன்ற வெள்ளைப் பற்களும் ஜெகஜ்ஜோதியாய் ஒளிவீச, எதிரில் வந்து காட்சி கொடுத்த அந்த இன்பவடிவைக்கண்ட மந்திரவாதி புன்னகை செய்து, “இன்ஸ்பெக்டர் சாமி இருக்கிறாரா?” என்றார். அதைக் கேட்ட அந்த அம்மாளாகிய சமயசஞ்சீவி ஐயரது மனைவி, அவரை ஏற இறங்க உற்று நோக்கி, “இல்லை; போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார். நீர் யார்?” என்று மிகவும் கம்பீரமாகக் கேட்டாள். மந்திரவாதி அவளிருந்த கூடத்தை நோக்கிப் புன்னகை செய்து நடந்தவண்ணம், “ஐயர் ஸ்டேஷனில் இல்லையே! இப்போது அவர் இங்கேதான் இருக்கிறாரென்று சொன்னார்களே!” என்றார். அவரது முகத்தில் போக்கிரிக்களையும் புன்னகையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/213&oldid=1252388" இலிருந்து மீள்விக்கப்பட்டது