பக்கம்:மேனகா 2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

மேனகா

தவித்ததாகவும் குதிரை வண்டியாவது மோட்டார் வண்டியாவது பட்டணத்துக்கு வருமோவென்று அவர் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள். தவிர, மூன்றாவது வகுப்பு ஜனங்கள் தங்குமிடத்தில் நாதனில்லாமல் கிடந்த ஒரு துணியையும் ஸ்டேஷன் மாஸ்டர் போலீசாரிடம் ஒப்புவித்தார். அந்தத் துணியை நான் பார்த்தேன். அது நம்முடைய எஜமானரின் அங்கவஸ்திரந்தான். பணத்தோடு நம்முடைய எஜமானரைத் திருடர் தூக்கிக்கொண்டு போயிருப்பார்களோ, அல்லது அவர் திருடரைத் துரத்திக் கொண்டு போய்விட்டாரோ என்று போலீசார் பலவாறு யூகித்து, மேலும், விசாரணை செய்கிறார்கள்; விவரத்தை மறுபடியும் எழுதுகிறேன். இந்தக் கடிதத்தை இராத்திரியில் எழுதினே னாகையால் தபால் தலை ஒட்டாமல் போட்டேன். தங்கம்மாளை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள். ஆபரேஷன் செய்யும் படி டாக்டர் துரையிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேவகன், ரெங்கராஜு.

என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தை கிட்டன் படிக்கக் கேட்ட கனகம்மாள் திக்பிரமை கொண்டாள். கிட்டனும் திகைப்படைந்தான். இருவரும் வாய்திறந்து பேச மாட்டாமல் ஊமைகளைப் போலாயினர். வில்லியம்ஸ் துரையின் முகம் மாறுதலடைந்தது. இந்தச் சிகிச்சையில், தமக்கு இருநூறு ரூபாய் கிடைக்குமென்று நம்பி யிருந்தார். தாம் இனிமேல் அங்கிருந்தால் ஆபரேஷனை இலவசமாக செய்யும்படி கனகம்மாள் வற்புறுத்துவாளென்று நினைத்தவ ராய், “சரி; நான் அவசரமாகப் போகவேண்டும். உங்களுடைய காரியங்களும், உங்களுக்கு வரும் ஆபத்துக்களும் வேடிக்கையாக இருக்கின்றன: எப்படியாவது செய்து கொள்ளுங்கள். நான் முடிவாக ஒரு வார்த்தை சொல்லுகிறேன். இந்த அம்மாளின் உயிர் இப்போது போகுமோ அடுத்த நிமிஷத்தில் போகுமோ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/227&oldid=1252403" இலிருந்து மீள்விக்கப்பட்டது