பக்கம்:மேனகா 2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புண்ணாகச் செய்ததினி போதும் பராபரமே?

227

நினைக்கக்கூடிய நிலைமையிலிருக்கிறது. ஆபரேஷன் செய்வதை இனி ஒரு நிமிஷமும் நிறுத்தக் கூடாது. இந்த அம்மாளின் புருஷனோ காணாமல் போயிருக்கிறார். அவர் வருகிறவரையில் நாம் காத்திருக்க முடியாது. இந்தக் கடிதத்தை நான் ஆதாரமாக வைத்துக் கொள்ளுகிறேன். நீ உத்திரவாதியென்று பத்திரம் எழுதிக் கொடுத்தால் போதுமென்று ஒப்புக்கொள்கிறேன். இதனால் எனக்குத் துன்பம் நேரிட்டாலும் அதற்கு நான் உடன்படுகிறேன். அது ஒன்று தான் என்னால் செய்யக்கூடிய உதவி. அவரிடமிருந்து இனி பணம் வராதென்பது இந்தக் கடிதத்திலிருந்து நிச்சயமாகத் தெரிந்துவிட்டது. உங்களுக்கு இந்த ஊரில் யாராவது சிநேகிதர்களாகிலும், பந்துக்களாகிலுமிருந்தால், அவர்களிடம் போய் பணத்தை மாத்திரம் நீங்கள் தயாரித்துக் கொண்டு வந்து விடுங்கள்; உடனே நான் காரியத்தை முடித்துவிடுகிறேன். நான் வேறு எவ்விதமான உதவியையும் செய்யமுடியாது. இனிமேல் நான் இந்த இடத்துக்கு வேளைக்கு வேளை வந்து கொண்டிருக்க முடியாது; இப்போது நான் எத்தனையோ வேலைகளைக் கெடுத்துக் கொண்டு வருகிறேன். இதுவரையில் எனக்கு உங்களால் செலுத்தப்படவேண்டியது ரூபாய் ஐம்பதுக்கு மேலாகிறது. நான் சொல்லக்கூடியதைச் சொல்லிவிட்டேன்; இனி உங்கள் இச்சைப்படி செய்யுங்கள்” என்று கூறிக் கொண்டே வெளியிற் போய்விட்டார்.

அந்த வில்லியம்ஸ் துரையின் சொற்களைக் கேட்ட கனகம்மாள் எதையும் சொல்லமாட்டாமல் திகைத்து நின்றாள். அதுகாறும் சாம்பசிவம் பத்திரம் எழுதிக் கொடுப்பதே முதன்மையான காரியமென்றும், அதனாலேதான் ஆபரேஷன் செய்யப்படவில்லையென்றும் சொல்லிவந்ததுரை, அப்போது பணத்திற்கு முதன்மை கொடுத்துப் பேசினதைக் கண்டு, மேலே என்ன செய்வதென்பதையறியாமல் மதிமயக்கங்கொண்டு கால் நாழிகை நேரம் வரையில் ஒய்ந்து உட்கார்ந்திருந்தாள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/228&oldid=1252404" இலிருந்து மீள்விக்கப்பட்டது