பக்கம்:மேனகா 2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

மேனகா


பெரு:- அவள் இத்தனை நாள் பிழைத்தாளோ? மாண்டு போனாளோ? நீ இதைக் கொண்டு திருப்தி யடைகிறாயே! எனக்கு மாத்திரம் இன்னமும் திருப்தி யுண்டாகவில்லை. நடந்ததெல்லாம் சரிதான். அந்தக் கனகி முண்டை திருடன் கையில் அகப்படாமல் தப்பித்துக் கொண்டாளே. அதுதான் என் மனசுக்குப் பெருத்த குறையாக இருக்கிறது. திருடன் அந்தக் கனகி முண்டையின் புடவையைப் பிடுங்கிக் கொண்டு திரெளபதி வஸ்திராபஹரணம் செய்து அப்படியே திகம்பரமாக நாற்சந்தியில் லாந்தர் கம்பத்தில் கட்டிவிட்டுப் போயிருந்தால் எனக்குப் பரம சந்தோஷமாக இருக்கும்! ஜனங்கள் வந்து வேடிக்கை பார்ப்பார்கள்.

கோம:- அந்தச் சமயத்தில், நான் போகவேண்டும்; காரி எச்சிலை அவளுடைய முகத்தில் துப்பிவிட்டு வரவேண்டும். ஏனடா சாமா! அவனுக்கு டிப்டி கலெக்டர் உத்தியோகம் தொலைந்து போய்விட்டது. இடுப்பிற்குத் துணிகூட வைக்காமல் திருடன் மழுங்கச்சிரைத்து விட்டானே; இனிமேல் பிண்டத்துக்கு அவன் என்னடா செய்வான்?

சாமா:- அந்த வேலை நமக்கெதற்கு? அவர்களுடைய சம்பந்தம் ஒழிந்துபோய்விட்டது. உடனே நமக்கு நல்ல காலமும் வந்து விட்டது. அவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன?

பெரு:- அந்தக் கனகி முண்டையின் அகம்பாவம் இன்னம் குறைந்திருக்காது. அவளும் அவனும் இந்த ஊருக்கு வர வேண்டும்; நம்முடைய பங்களா வாசலில் நின்று பிச்சை கேட்க வேண்டும். என் கையாலேயே ஒரு பிடி அரிசி போட்டுவிட்டு, சம்பந்திகளே! செளக்கியமா? எங்கள் வாசல் பெருக்க ஒரு வேலைக்காரியும் மோட்டார்துடைக்க ஒரு ஆளும் வேண்டும். நீங்கள் வருகிறீர்களா என்று வயிற்றெரிச்சல் தீரக் கேட்டுவிட்டு வருவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/241&oldid=1252417" இலிருந்து மீள்விக்கப்பட்டது