பக்கம்:மேனகா 2.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

மேனகா

மென்று ஒரு வார்த்தை சொல்லி அந்த ஒப்பந்தம் முடிவான தென்பதை, ஒரு முத்தத்தினால் முத்திரை வைத்து உறுதிப் படுத்துங்கள்” என்று கூறி நாணிக் கீழே குனிந்தாள். அப்போது அந்தப் பைங்கிளியின் அழகு முன்னிலும் ஆயிரமடங்கு அதிகரித்துத் தோன்றியது. அவளது முகத்தில் யெளவன காலத்தின் களை ஜ்வலித்தது. வராகசாமியின் மனம் தத்தளித்தது. அவளது வசீகரமான இனிய சொற்களால் முற்றிலும் கவரப்பட்ட வராகசாமி, என்ன மறுமொழி சொல்வ தென்பதை அறியாமல் சிறிது நேரம் மெளனம் சாதித்தான்; திரும்பவும் அந்தக் கிள்ளை மொழியாள் அவனை நோக்கி, “தாங்களுக்கு என்மேல் கோபம் போலிருக்கிறது? ஆசை வெட்கமறியாது என்பார்கள். அதைப்போலத்தான் துணிந்து என் மனதை வெளியிட்டு விட்டேன். என்னை ஆக்குவதும் அழிப்பதும் உங்கள் கையில் இருக்கிறது. நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளா விட்டால், நான் உங்களுடைய காலடியிலேயே உயிரை விடுவேனேயன்றி உங்களை விட்டு ஒரு நிமிஷமும் பிரிந்து உயிர் வாழமாட்டேன்” என்றாள். அதைக் கேட்ட வராகசாமியின் மனம் பதறியது; உரை தடுமாறியது; கண்களில் கண்ணிர் துளித்தது. “பெண்மணி என் மனம் படும் பாட்டை நான் என்ன வென்று சொல்வேன்! ஆகா! அதிர்ஷ்டஹீனனாகிய என்மேல் வாஞ்சையை வைத்ததனால், மேனகா இறந்தது போதாதா! என் விஷயத்தில் அந்தரங்கமான அன்பைச் சொரிந்து எனக்கு அமுத சஞ்சீவி போல அமைந்த பேருபகாரியான நீயும் என் பொருட்டு உயிரை விட வேண்டுமா ? இதுவும் ஈசுவரனுடைய சோதனை போலிருக்கிறது. எனக்கு எவ்வளவோ அருமையான மனைவி வந்து வாய்த்தாள். அவளை வைத்துக் கொண்டு சுகமாக வாழ நான் கொடுத்து வைக்க வில்லை. அதன் பயனாக நான் எத்தனையோ வேதனைகளை அடைந்து இன்னமும் தவிக்கிறேன். என்னால் அவளுக்கும் சகிக்க முடியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/283&oldid=1252460" இலிருந்து மீள்விக்கப்பட்டது