பக்கம்:மேனகா 2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

53

இருந்தது. தம்முடன் உரையாட அவளுக்கு விருப்பமுண்டென யூகித்துக் கொண்ட சாமாவையர் அதிகரித்த உற்சாகமும், ஆவேசமும், அவளுடன் நெருங்கிப்பழக வேண்டுமென்னும் ஆவலும் கொண்டார். தமது ஆசனத்தை விட்டு அவள் பக்கமாக அரைச்சாண் நகர்ந்து உட்கார்ந்த வண்ணம், "திருவாரூர் ஸ்டேஷனுக்கும் உங்கள் வீட்டிற்கும் எவ்வளவு தூரமிருக்கும்? நடுராத்திரியில் நீ தனியாக ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்குப் போகவேண்டுமோ வழியில் திருடரின் பயமுண்டோ?” என்று அவளுடைய விஷயத்தில் அந்தரங்கமான அபிமானத்தைக் கொண்டவராய்க் கேட்டார்.

அவ்வணங்கு முன்னிலும் அதிகரித்த குலுக்குத் தளுக்கு நாணம் முதலியவற்றைக் காட்டி, “எங்கள் வீடு கமலாலயம் தெற்கு வீதியிலிருக்கிறது. குதிரை வண்டிகள் ஏராளமாய்ப் போகும்; பயமில்லை” என்று முன்னிலும் அதிகரித்த இனிமை, வசீகரம், மகிழ்வு முதலியவற்றைக் காட்டி மறுமொழி கூறினாள். அவளது சொல்லழகும், அபிநயத்தினழகும் அவர் மனதைக் கொள்ளைகொண்டன. மிகவும் மதிமயக்கமும், மோகவெறியுங் கொண்டார். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணித் தவித்தார். அவரது மனது பல இனிமையான கணவுகளைக் கண்டு இன்பக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தது. யாவரும் தூங்கிய அந்த இராக்காலத்தில் கமலாப்பழம் விற்கப்பட்டதும், அதை தாம் வாங்கியதும் தெய்வத்தின் செயலாகத் தமக்கு ஏற்பட்டன வென்றும், அந்த உயிர்க் கமலாக் கனியைத் தாம் பெறுவதற்கு, அது சகுனமென்றும் நினைத்து அளவளாவியிருந்தார். அப்போது பலகையிலிருந்த ஒரு மூட்டைப்பூச்சி, மாம்பழத்தைப்போல விருந்த அவரது தேகத்தில் வாயை வைத்து ஒரு வாய் இரசம் உறிஞ்சியது. அது, “ஐயரே! சின்னக் கமலாவை வாங்கியதில் ஏமாறிப்போய் நான்கணா இழந்தீர். பெரிய கமலா வினால் எவ்வளவு ஏமாறுவீரோ! ஜாக்கிரதை, இது நல்ல சகுனமல்ல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/55&oldid=1251890" இலிருந்து மீள்விக்கப்பட்டது