பக்கம்:மேரியின் திருமகன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கல்லுக்குள் தேரையை வளர்ப்பான், அவன்
கன்னியைத் தாயாகவும் வரிப்பான். வியப்பென்ன!
மலடியும் தாயானாள் என்றுலகம் மயங்க
எலிசபெத் இப்போது அன்னை என்பதறிக
இயற்கையை வெல்லுவதே அவனுக்கு இயற்கை
உலகை மேய்க்கவும் மீட்கவும் வருகின்றான்
அவன் பெயர் ஏசுபிரான் வாழி என மறைந்தான்

கன்னிமேரி எலிசபெத்தை நலம்காண வந்தாள்
வாழ்த்துக்கு வாழ்த்து பரிமாறிக் கொண்டனர்
தெய்வத்தின் விந்தைக்கு இருவரும் வியந்தனர்

மேரிக்கு நிச்சயித்த மணமகன் ஆசை
கன்னியும் தாயான கதைக்கு மயங்கினான்.
அவளை மறுப்பதென்ற முடிவுக்கு வந்தான்
அன்றிறவு கனவில் அவனுக்கோர் தெளிவு,
மாதவள் தேவனுக்கு மாதா ஆவதற்கு
மாதவம் புரிந்தவள் தவறு புரியாதவள்
தள்ள வேண்டாம் தலைவி அவ்ளே
என்றது உள்ளுணர்வு, உணர்ந்தான்; மணந்தான்.

பேரரசன் கட்டளை பிறந்தது குடிமதிப்பெடுக்க
வந்தவூர் இருந்தவர் சொந்த ஊர் போயினர்
சூசையும் மரியாளுடன் பெத்லகாம் சென்றார்
ஒருகுன்றின் சரிவில் கன்றின் தொழுவில்
இரவு தங்கினர் திங்கள் விளக்கெரித்தது
தென்றலும் பாடிற்று, தேன்சிந்திற்று வானம்