பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

15

தேவையான தேசியக் கலாசாலைகளும், சர்வகலாசாலைகளும் ஏற்படுத்தப்பட்டன. காலின்ஸ்—டிவேலரா காலத்தில் சுதந்திர சூரியன் உதயமாயிற்று என்றால், அவர்களுக்குச் சற்று முந்திய பார்னல் காலத்தை உஷாகாலம் என்று கருதலாம்.

1914-ம் ௵ முதலாவது உலக மகாயுத்தம் தோன்றிய சமயத்திலே, அயர்லாந்துக்குச் சுய ஆட்சி கொடுப்பதற்காக ஒரு மசோதா நிறைவேறியிருந்தது. யுத்தம் முடிந்த பிறகே அது அமலுக்கு வரவேண்டும் என்று குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், அக்காலத்தில் தேசீயத் தலைவர்களாக விளங்கிய ஆர்தர் கிரிபித், டி'வேலரா, காலின்ஸ் போன்றவர்கள், யுத்த காலமே சுதந்திரப் போருக்கு ஏற்ற காலம் என்று கண்டு, சுயராஜ்யக் கொடியை உயரே தூக்கி, ஜனங்களை ஒற்றுமைப்படுத்திச் சங்கநாதம் செய்தார்கள். கூலிப் பட்டாளத்தில் சேர்ந்து ஆங்கிலேயருக்காக ஐரோப்பியப் போர்க் களங்களில் மடிவதைக் காட்டிலும், அவர்களை எதிர்த்து அயர்லாந்திலேயே அயர்லாந்துக்காக மடிவது மேல் என்று பெரும்பாலான ஐரிஷ் இளைஞர்கள் கருதினர்கள். 1916-ஈஸ்ட்டர் வாரம் முதல் பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தன. அவைகளின் முடிவாக அயர்லாந்து ஓரளவு சுய ஆட்சி பெற்றது. அந்த 'ஓரளவு சுய ஆட்சியையே பின்னல் டி'வேலரா பூரண சுயராஜ்யமாக மாற்றிக்கொண்டுவிட்டார்.

ந்நூலை நான் எழுதும்படி தூண்டியவர்கள் 1932-34 ல் என்னோடு சிறையிருந்த நண்பர்கள். அவர்கள் என்னை ஊக்கப்படுத்தியதையும் பாராட்டியதையும் நினைத்தால், இன்றுகடட எக்களிப்பு ஏற்படுகிறது. ஆங்கிலம் தெரியாத பாவத்தினால் (அல்லது புண்ணியத்தினால்!) அவர்கள், இரவில் நான் நெடுநேரத்திற்குப் பிறகு எழுத எழுத, ஒவ்வொரு தாளாக வாங்கிப் படிப்பார்கள்.

அந்த நண்பர்கள் பாராட்டிப் படித்த இந்த 'மைக்கேல் காலின்ஸ்' சரித்திரத்தை 1938, பெப்ரவரி 16௳, முதல் பதிப்பாக வெளியிட்டேன். அச்சிட்ட 3,000 பிரதிகளும் விரைவிலே விற்றுவிட்டன. வாசகர்களும் பத்திரிகாசிரியர்களும் புத்தகத்தை மிகவும் பாராட்டினார்கள். இந்நூலின் பிரபலத்திற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி நானும் சிந்திக்க நேர்ந்தது.