பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

மொஹெஞ்சொ - தரோ


கிடைத்த கல்லிற் செதுக்கப்பட்ட தேர் ஒன்றினைப் பெரிதும் ஒத்துள்ளனவாம். இத்தகைய வண்டிகள் களிமண்ணாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்டுள்ளன. வெண்கல வண்டிப் பதுமைகளிலிருந்து, அக்காலத்தவர் வண்டிக்கு மேற்கூரையை அமைத்துப் பலர் உள்ளே அமர்ந்து செல்லுவதற்கு ஏற்றவாறே வண்டிகளை அமைத்துப் பயன்படுத்தினர் என்பதை அறியலாம்: அவ்வண்டிகளைப் போன்றவையே இன்றும் சிந்துப் பிரதேசக் கிராமங்களில் இருப்பவை ஆகும். மண் விலங்குகளை மண் தட்டுகளில் நிறுத்திச் சக்கரம் அமைத்துக் குழந்தைகள் இழுப்பு வண்டிகளாகப் பயன்படுத்தினர் என்பதும் அறியத்தக்கது.

சொக்கட்டான் கருவிகள்

மொஹெஞ்சொ-தரோவில் களிமண்ணாலும் கற்களாலும் செய்யப்பட்ட பல திறப்பட்ட சொக்கட்டான் காய்கள், கவறுகள், தாயக்கட்டைகள் முதலியன கண்டெடுக்கப்பட்டன. கவறுகள் ஆறு பட்டைகளை உடையனவாகக் காண்கின்றன. ஒவ்வொரு பட்டையிலும் வட்டப்புள்ளிகள் இட்டு, வெவ்வேறுவித எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தந்தத்தால் செய்யப்பட்டபாய்ச்சிகைகள் இக்காலத்தன போலவே அமைந்துள்ளன. இவை நிமித்தம் பார்ப்போரால் குறி கூறுவதற்காகப் பயன்பட்டவை. இவற்றின் மீது புள்ளிகள் இல்லை; ஒவியங்களும் நீலக்கோடுகளும் வரையப்பட்டுள்ளன. ஆதலின், இவை சொக்கட்டான் ஆடப் பயன்பட்டவை அல்ல என்று ஒரு சார் அறிஞர் அறைகின்றனர். இவை அல்லாமல், சொக்கட்டான் காய்கள் பல கல்லாலும் களிமண்ணாலும் செய்யப்பட்டு அழகிய நிறங்கள் பல பூசப்பட்டுள்ளன. ஆயின், ஆராய்ச்சியாளர் சிலர் இவற்றைச் சிவலிங்க வடிவங்கள் என்று கூறுகின்றனர். இவற்றின் மாதிரிகள் சில சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. அவை இக்காலத்தில் சதுரங்கம் ஆடுவோர் பயன்படுத்தும் காய்கள் (Pawns) போலவே இருக்கின்றன.