பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கணிப் பொருள்கள்

107


தரையில் வெட்டப்பட்ட சிறு கால்வாயில் பாய்ச்சிப் பாளம் பாளமாக எடுத்து வந்தனர். இம்முறையிற் கிடைத்த செம்புப் பாளம் ஒன்றின் நிறை 2½ இராத்தல் இருந்தது. இதுகாறும் கூறியவற்றால், மொஹெஞ்சொ-தரோ மக்கள் சிந்துப் பிரதேசத்திலேயே கிடைத்த மண்ணுடன் கலந்த செம்பையும் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட செம்பையும் பயன்படுத்தி வந்தனர். என்பதை அறியலாம்.

வெண்கலம்

அப் பண்டைக்கால அறிஞர் வெள்ளீயத்தையும் செம்பையும் கலந்து வெண்கலம் ஆக்கக் கற்றிருந்தனர். அவர்கள் தொடக்கத்தில் செம்பையே மிகுதியாகப் பயன்படுத்தி வந்தனர்; ஆனால், செம்பைவிட வெண்கலம் உறுதி உடையது என்பதை அறிந்ததும், வெண்கலத்தையும் மிகுதியாய் பயன்படுத்தத் தொடங்கினர்; பொதுவாகச் செம்பில் 100க்கு 9 முதல் 12 பங்கு வெள்ளியத்தைச் சேர்ப்பதைவிட்டு, 100க்கு 22 முதல் 26 பங்கு வரை வெள்ளியத்தைச் சேர்த்து வெண்கலமாக்கியுள்ளனர். அதே காலத்தில் சுமேரியாவிலும் இம் முறை கையாளப்பட்டது என்று டாக்டர் பீராங்க்போர்ட், டாக்டர் உல்லி போன்ற அறிஞர் கருதுகின்றனர். ஆயின், அது தவறு; சுமேரியர்க்கு வெண்கலம் செய்யத் தெரிந்திலது. அவர்கள் பயன்படுத்திய வெண்கலம் பிறநாடுகளிலிருந்தே வரவழைக்கப்பட்டது; சுமேரியர் செம்பைப் பயன்படுத்தவே அறிந்திருந்தனர். ஆயின், அதே காலத்தில் சிந்துப் பிரதேசமக்கள் செம்பையும் வெண்கலத்தையும் பயன்படுத்த நன்கு அறிந்திருந்தனர் என்று ஓர் அறிஞர்[1] அறைகின்றனர். சிந்துப் பிரதேச மக்கள் வெண்கலம் செய்த முறை மிக்க பண்புடையதாக இருந்ததால், பிற்காலத்தில் அசோகன் ஆட்சியில் நாலந்தாவில் இதே முறை சிறிதும் மாற்றமின்றிக் கைக் கொள்ளப்பட்டது.[2]

  1. Patrick Carleton’s ‘Buried Empries’, p.155
  2. K.N.Dikshit’s ‘pre-historic Civilization ofthe Indus Valley’, p.54.