பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

மொஹெஞ்சொ - தரோ


நெற்றிச் சுட்டிகள்

வட்டமாக முக்கோண வடிவத்திற் கூம்பியனவாகச் செய்யப்ட்டுள்ள நகைகள் சில மொஹெஞ்சொ-தரோவிலும் ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன.இவைகுழந்தைகளின் நெற்றியில் தொங்கவிடப்படும் பதக்கங்கள் போலக் காண்கின்றன. இவை, பஞ்சாபிலும் மார்வாரிலும் உள்ள பெண்கள் தலையைச் சுற்றிப் பொன் நாடா ஒன்றைக் கட்டி, அதிற் கோத்து அணியும் சுட்டி போலவே காணப்படுகின்றன. இச்சுட்டிகள் 5 செ. மீ. சுற்றளவுடனும் 6.10 செ. மீ. உயர்த்துடனும் காணப்படுகின்றன. இவை பொன், வெள்ளி, செம்பு, பீங்கான் முதலியவற்றால் செய்யப்பட்டுள்ளன. இவை தலைமயிருடன் இணைப்பதற்கும் நாடாவிற் கோப்பதற்கும் ஏற்றவாறு துளையுடன் கூடி இருக்கின்றன. சிப்பிகளில் மூன்று நான்கு அழகிய துண்டுகளைப் - பொருத்தியும் இத்தகைய சுட்டிகள் செய்யப்பட்டுள்ளன. இச்சுட்டிகளைக் கொண்ட களிமண் பதுமைகள் நிரம்பக் கிடைத்தமையால், இவை தலையணிகளே என்பது வெள்ளிடை மலை. இக்காலத்தில் ‘நெற்றிச்சுட்டி’ என்று சொல்லப்படுவதும் நம் பெண்களால் தலையில் அணியப்படுவதுமாகிய தலை யணியைப் போன்றனவே இச்சுட்டிகள் எனல் ஒருவாறு பொருந்தும். இம்மாதிரியுள்ள சுட்டிகள் பல ஹரப்பாவில் கிடைத்துள்ளன. அவை நெற்றி முதல் உச்சித்தலை வரை ஒன்றன் பின் ஒன்றாக வைத்துக் கூந்தல்மீது அலங்கரிக்கப்பட்டன. இங்ஙனம் அலங்கரிக்கப்பட்ட நிலையில் சில பதுமைகள் காணப்படுகின்றன. இச்சுட்டிகள் பல பொன்னால் இயன்றவை: அடிப்புறம் கூந்தல் இழைகள் நுழையத் தக்கபடி வெள்ளி இணைப்புடன் விளங்குகின்றவை. இவற்றுள் ஒன்று 3 செ. மீ. உயரமும் அடிப்பாகத்தில் 4 செ.மீ. அகலமும் உடையது.[1]


  1. M.S.Vats’s ‘Excavations at Harappa’, Vol. I, p.64