பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

மொஹெஞ்சொ - தரோ


(3) அதே நகரத்தில், உடலில் துவாரமுள்ள முட்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மண் பாத்திரங்கள் சில கிடைத்தன. அவை இராக்கில் கி.மு.2800-கி.மு.2500க்கு உட்பட்ட காலத்துப் பொருள்களோடு கலந்திருந்தன. அவை இந்தியாவிற்கே உரியவை என்பது அறிஞர் கருத்து.[1]

(4) ஒருவகை வெளிறிய பச்சைக் கல்லால் செய்யப்பட்ட பாத்திரம் ஒன்று பாய் வடிவ வேலைப்பாடு கொண்டதாக மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்தது. அத்தகைய பாத்திரங்கள் பல டெல் அஸ்மர், கிஷ், சுசா முதலிய பண்டை நகரங்களில் கிடைத்துள்ளன.

நந்தி வழிபாடு

(5) 1936 இல் டெல் அக்ரப் (Tel Agrab) என்னும் இடம் புதிதாகத் தோண்டப்பட்டது. அங்குக் கி.மு. 2800 க்கு உரிய கோவில் ஒன்று காணப்பட்டது. அதனுள் பூசைக்குரிய பாண்டங்கள் பல கிடைத்தன. ஒருவகைப் பச்சைக் கல்லால் ஆன பாத்திரத்தின் மீது தொழுவத்தின் முன் பெரிய இந்திய பிராமனி எருது நிற்பதாகவும், அது நின்றுள்ள கட்டிடத்தின் முன்புறம் சுமேரிய மனிதன் உட்கார்ந்திருப்பது போலவும் சித்திரம் தீட்டப்பட் டுள்ளது. இப்படத்தினால், அப்பண்டைக் காலத்திலேயே நந்தி வழிபாடு (Bull Cult) சிந்துவிலிருந்து சுமேரியாவுக்குச் சென்றிருத்தல் விளங்குகிறது அன்றோ!

(6) முத்திரைகளும் பிற பாத்திரங்களும் செய்தற்குரிய உயர்தரக் கற்கள் சுமேரியாவிற்கு அனுப்பப்பட்டுச் செம்மைப் படுத்தப்பட்ட பிறகு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்னை? உயர்தரப் பச்சைக் கற்களும் வேறு கற்களும் கொண்டு செய்யப் பட்ட மணிகள் மொஹெஞ்சொ-தரோவைவிட ‘உர்’ நகரில் (சுமேரியாவில்) மிகுதியாகக் கிடைத்துள்ளமையால் என்க.


  1. K.N.Dikshit’s Pre-historic Civilization of the IV’, pp 52, 56.