பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

மொஹெஞ்சொ - தரோ


பொற்கொல்லர் தொழில்

சிந்து வெளியிற் கிடைத்துள்ள பொன்னாற் செய்யப்பட்ட அணிகளில் அமைந்துள்ள வேலைப்பாடு சிறப்புடையதாகும். காப்புகள், வளையல்கள், அட்டிகைகள், கழுத்து மாலைகள், அம் மாலைகளில் கோக்கப்பட்ட பலவகைப் பொன்மணிகள், பூ வேலைப்பாடு அமைந்த மணிகள், பல உருவங்கொண்டமணிகள், நுண்ணிய வேலைப்பாடமைந்த தலைச் சாமான்கள், சுட்டிகள், காதணிகள், கடகங்கள், மோதிரங்களும், இன்னபிறவும் அக்காலப் பொற்கொல்லர் வேலைப்பாட்டை விளக்குவன ஆகும். இவ்வணிகளில் இழைப்பு வேலைப்பாடு சிறந்து காணப்படுகிறது. மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்தவற்றைவிட ஹரப்பாவிலேயே பொன் அணிகள் மிகுதியாகக் கிடைத்துள்ளன.

இரத்தினக்கல் சோதனை

அணிகள் செய்தற்கமைந்த பல வகை இரத்தினக் கற்களையும், வேறு பல நிறக் கற்களையும் சோதிப்பதற்கென்றே பலர் இருந்திருத்தல் வேண்டும். என்னை? ‘நவரத்தினங்கள்’ என்று சொல்லப்படும் மணிகள் அனைத்தும் சிந்துவெளி மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன: பண்பட்ட வேலைப்பாடு கொண்டுள்ளன; நீலகிரி முதலிய நெடுந் தொலைவில் உள்ள இடங்களிலிருந்தும் கற்கள் கொண்டு செல்லப்பட்டன என்னும் விவரங்களால் என்க.

செதுக்கு வேலை

சிந்து வெளியில் இதுவரை 1000க்கு மேற்பட்ட பலவகை முத்திரைகள் கிடைத்துள்ளன. முத்திரையின் ஒரு புறம் ஏதேனும் ஒர் உருவமும் சித்திர எழுத்துகளும் மறுபுறம் வேறு குறியீடுகள் பலவும் காணப்படுகின்றன. இவை செய்யப்பட்டு 5000 ஆண்டு கட்கு மேலாகியும், இன்றும் புத்தம் புதியனவாகக் காட்சியளிக்கின்றன எனின், இவற்றைச் செய்தவர் தொழிற் புலமையை என்னென்பது? செம்பு நாணயங்கள் மீதும் முத்திரைகள்