பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமய நிலை

191


கைகள் நிறையக் கடகங்கள் பூட்டப்பட்டுள்ளன. இடுப்பில் இரட்டைப் பட்டையாக ஒர் அரைக் கச்சை காணப்படுகிறது. இவ்வுருவத்தின் வலப்புறம் யானையும் புலியும், இடப்புறம் எருதும் காண்டாமிருகமும் நிற்கின்றன. இருக்கையின் அடியில் இரண்டு மான்கள் இருக்கின்றன.[1] யோகியின் தலைமீது வளைந்த எருமைக் கொம்புகள் உள. நடுவில் தடித்த மலர்க் கொத்தோ இலைக் கொத்தோ நிமிர்த்தி வைக்கப்பட்டுள்ளது. ‘இது சிவனைக் குறிப்பது’ என்று சர் ஜான் மார்ஷல் கருதுகிறார். தலைமீதுள்ள கொம்புகளும் பூங்கொத்தும், பிற்காலத்தில் திரிசூலமாக மாறியிருத்தல் வேண்டும் என்று அறிஞர் அறைகின்றனர். ஒரு சாரார் ‘இக் கொம்புகள் சாஞ்சி ஸ்தூபத்தின் வாயிலில் பொறிக்கப்பட்டுள்ள சூலத்தைப் போன்றுள்ளன. யோகியை அடுத்து விலங்குகள் இருப்பது சிவன்-பசுபதி என்பதைக் குறிக்கின்றதன்றோ? மூன்று தலைகள் நன்கு தெரிவதால், பின்புறம் இரண்டு தலைகள் இருத்தல் கூடும் என்று கூறுகின்றனர். வேறு ஒரு சாரார், ‘மூன்று தலைகளும் ஆக்கல், அளித்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைக் குறிப்பன’ என்பர். இதுபோன்ற முத்தலை உருவங்கள் ‘ஆபு’ மலைக்கருகில் அழிந்து கிடக்கும் கோயில்களிலும், வட ஆற்காடு ஜில்லாவில் காவேரிப் பாக்கத்தை அடுத்த மேலைச் சேரியிலும், பெல்காம் கோட்டத்தில் உள்ள கோகாக்’ நீர் வீழ்ச்சிக்கு அருகிலும், உதயபுரி சமஸ்தானத்தைச் சேர்ந்த ‘சித்தோர்கார்’ என்னும் இடத்திலும் காணப்பட்டன. ஆயின், இவை வரலாற்றுக் காலத்தில் வழக்காறு அற்றுப்போயின.

லிங்க வழிபாடு

பெரிய லிங்கங்களும் சிறிய லிங்கங்களும் மிகப் பலவாகக் கிடைத்துள்ளன. ஹரப்பாவில் மட்டும் 600க்கு


  1. ‘சிவபிரான் யானைத் தோலைப் போர்த்துள்ளார். புலித் தோலை அரையிற் கட்டியுள்ளார். எருதை ஊர்தியாகக் கொண்டார் மானை ஏந்தி யுள்ளார்’ என்பன ஈண்டுக் கவனிக்கத் தக்கன.