பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

மொஹெஞ்சொ - தரோ


குறிப்பது போலும்[1] பெண்ணுருவத்தின் முதுகில் தலையற்ற புலியுடல் பொருத்தப் பெற்றுள்ளது. இத்தகைய உருவம் தேவதையைக் குறிப்பது என்றே அறிஞர் கருதுகின்றனர்.

பிற விலங்குகள்

சிந்துவெளி மக்கள் நீண்ட கொம்புகளும் பருத்த திமில்களும் உடைய எருதை வணங்கியதோடு எருமை, காட்டு எருமை, யானை, வேங்கை, கரடி, மான், காண்டாமிருகம், முயல், வெள்ளிாடு முதலிய விலங்குகளையும் வேறு தெய்வங்கட்குப்


  1. வியாக்ரபாதமுனிவர் உருவம் இங்குச் சிந்திக்கற் பாலது. ஆஸ்ட்ரேலிய இனத்தவரான கொண்டர், இறந்தவனைப்பற்றிச் செய்யும் இரண்டாம் நாட் சடங்கில், அவனை எரித்த இடத்தில் படையல் இட்டு அவனது ஆவியை விளித்து. ‘நீ பிசாசாகவோ புலியாகவோ வந்து எங்களைத் துன்புறுத்தலாகாது’ என்று வேண்டுவது இன்றும் வழக்கம் என்பதை அறிக. மேலும் அக்கொண்டர்கள். தாம் தம் பகைவரை அழிக்கும் பொருட்டுப் புலியாகவோ பாம்பாவோ உருமாறும் ஆற்றல் பெற்றவர் என்பதை நம்புகின்றனர்; இராக்காலங்களில் தூங்கும்பொழுது ஆவி வெளிச் சென்று சுற்றுவதாக நம்புகின்றனர்; அது புலியுருவில் அலைவதாக நம்புகின்றனர்; சிறுத்தைப்புவி தெய்வத்தன்மை யுடையதென்பதை நம்புகின்றனர்; புலித்தோல் மீது கை அடித்துச் சத்தியம் செய்கின்றனர். ‘நான் இக்குற்றம் செய்தவனாயின். புலியால் கொல்லப் படுவேன் ஆகுக’ எனச் சூள் உரைக்கின்றனர். கோதாவரி ஜில்லாவில் உள்ள கோயிகள் என்னும் மலைவாணர் தம் தேவராட்டி இரவில் புலிமீது ஏறிக்கொண்டு ஏழு கிராமங்களைச் சுற்றுவதாக நம்பப்படுகிறாள். மேலும், “அவள் இரவில் புலி வேடங் கொள்வாள்; ஒரு கால் மனிதர் காலாக இருக்கும். அந்நிலையில் அவள் ‘மருட்புலி’ எனப்படுவாள்; இரவில் தனியே வரும் ஆள்மீது பாய்ந்து அச்சுறுத்திக்கொல்வான்” என்று அவளைப்பற்றிக் கோயிகள் கூறுகின்றனர். -'Thurston’s ‘Castes and Tribes of S.India’, Vol.III pp.395, 405, 406, 407; and Vol. IV, pp. 69, 70. இவ்விவரங்களை நோக்கச் சிந்துவெளிமக்கள் புலியை வணங்கி வந்தமைக்குரிய கருத்தைத் தெற்றெனத் தெளியலாம் அன்றோ?