பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

மொஹெஞ்சொ - தரோ


சென்னை மண்டிலம்

பல்லாரி, அனந்தப்பூர், கடப்பை, கர்நூல் என்னும் நான்கு கோட்டங்களிலும் புதிய கற்கால மக்களின் மட் பாண்டங்கள் மேற்சொன்ன இலக்கணங்களைக் கொண்டன வாகக் காணப்படுகின்றன. பெருங் கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட பலவகைச் சமாதிகள் பல்லாரிக் கோட்டத்தில் மிக்குள்ளன. அங்கு இதுகாறும் 2000க்கு மேற்பட்ட சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டன என ஜே.சி.பிரெளன் என்னும் ஆராய்ச்சியாளர் அறைந்துள்ளனர். அனந்தப்பூர்க்கோட்டத்தில் ‘ஹிந்துப்பூர்’ என்னும் புகை வண்டி நிலையத்துக்குக் கிழக்கே 7 கி. மீ. தொலைவில் ‘தெமகெடியபல்லே (பள்ளி)’ என்னும் சிற்றுார் உளது.அதன் கிழக்கிலும் தெற்கிலும் பல சிறிய குன்றுகள் இருக்கின்றன. அவை ஏறத்தாழ ஒரே தொடர்ச்சியாக உள்ளன். அவற்றுள் ஒன்று குகைகளாகச் செய்யப்பட முற்பட்டது என்பதற்குரிய அடையாளங்கள் தென்படுகின்றன. அங்கு நாற்றுக் கணக்கான கல்லுளிகள், வேறு பல கற்கருவிகள், சுத்திகள் முதலியன அகப்பட்டன. குண்டக்கல் புகைவண்டி நிலையத்திற்கு அருகில் மரச்சிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது புதிய கற்காலப் பெண்களது கூந்தல் அலங்காரத்திற்கு வேண்டப் பட்டதாகும். அஃது எடுக்கப்பட்ட இடத்தில் மதிப்புக்குரிய மட்பாண்டங்கள் பலவும் தோண்டி எடுக்கப்பட்டன. கர்நூல் கோட்டத்தில் உள்ள பில்லசுர்க்கம் குகையில் பற்களால் ஆன தாயித்துகள் கிடைத்தன.[1] இத்தகைய மலை முழைகளை ஆராய்வதால் பல பண்டைப் பொருள்கள் கிடைக்கும். ‘மலைப்பிரதேசங்களில் உள்ள காடுகளில் அஞ்சாது நுழைந்து, குகைகளைக் கண்டறிந்து, ஆராய்ச்சி நிகழ்த்துதல் அறிஞர் கடனாகும் என்று புட் (Foote) என்னும் ஆராய்ச்சியறிஞர் அறைந்துள்ளனர். கிருஷ்ணா சில்லாவில் ‘குடிவாடா’வில் இருக்கும்


  1. புலியின் பல்லைக் கயிற்றில் கோத்து அணிதல் பண்டைத் தமிழர் மரபு. அது புலிப்பல் தாலி எனப்படும்.