பக்கம்:ரமண மகரிஷி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

ரமண மகரிஷி


சூழ்நிலையின் நெருக்கடி நெல்லையப்பருக்குத் தெரிந்திட நியாயமில்லை அல்லவா?

ரமணரிடம் பேச முடியாத ஒரு நிலை உருவானதைக் கண்ட அவர், உடனே தனது தன் நிலையை உள்ளுணர்வை, விளக்கத்தை, உறவு முறையின் நெருக்கத்தைப் பழனிசாமி சாமியாரிடம் கூறினார்.

‘ஐயா சாமி’, நமது பரம்பரையில், இனத்தில் இப்படி ஒரு மகான் தோன்றியிருப்பதைக் குறித்து எங்களுக்கு மிகவும் பேரானந்தம் தான், ஆனால், ரமணர் இத்தகைய ஒரு நிலையிலே இருப்பதைத்தான் என்னால் பார்க்க சகிக்கவில்லை. அவர் துறவியாகவே இருக்கட்டும்; வாழட்டும் ஆன்ம சேவை செய்யட்டும்; அருளாசிகளை மக்களுக்கு வழங்கட்டும்! ஆனால் இதே பணியை, எந்த வித தொல்லைகளும் அவருக்குச் சூழாமல் எங்களோடு இருந்து கொண்டு செய்யட்டுமே! எங்களால் எந்தவித தடைகளும் அவரது தவத்துக்கோ, தியான வழிபாடுகளுக்கோ ஏற்படாதபடி நாங்கள் பாதுகாப்பாகவே இருப்போம் இல்லையா? என்று நெல்லையப்பர் மிகவும் தழ தழத்தக் குரலோடு பழனிசாமி சாமியாரிடம் பேசினார். இதே கருத்துக்களை ரமணரும் கேட்டுக் கொண்டேதான் இருந்தார்.

சாமி ரமணர் நெல்லையப்பரின் எந்தக் கருத்தையும் ஏற்காதது மட்டுமன்று; அவரை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நெல்லையப்பர் சில நாட்கள் திருவண்ணாமலையில் தங்கியிருந்து, அடிக்கடி ரமணரிடம் வேண்டுகோளை விடுத்தவண்ணம் தான் இருந்தார்.

எல்லாவற்றுக்கும் ரமணர் ஊமையாகவே இருந்தாரே யன்றி, நெல்லையப்பரின் பொய்மொழிகளைத் தன் காதுகளால் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. எனவே, நெல்லையப்பர் மதுரைக்கு ஏமாற்றத்துடன் திரும்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/68&oldid=1281059" இலிருந்து மீள்விக்கப்பட்டது