பக்கம்:ரோஜாச் செடி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீ மண் தொட்டியைப் பார்த்திருக்கிறாயா? அதிலே இரண்டு மூன்று துவாரம் போட்டுவைப்பார்கள். துவாரங்கள் இருந்தால் தொட்டியிலே அதிகமாகத் தண்ணிர் தங்காது. அதனாலே செடி கெடாது. மண் தொட்டிக்கே துவாரம் தேவையாயிருக்கிற போது, இந்த எவர் - சில்வர் தொட்டிக்குத் தேவையில்லையா? ஆகையால் நீ சொன்னது எல்லாமே சுத்தப் பொய். உள்ளதைச் சொல்; உனக்கு இதை யார் வளர்த்துக் கொடுத்தது ?” என்று மந்திரி கேட்டார்.

மந்திரி சொன்னதைக் கேட்க கேட்கக் மீராவின் தலை குனிந்தது. கண்ணிர் வழிந்தது. உடனே அவள் நடந்ததை நடந்தபடி கூறி, “தெரியாமல் செய்து விட்டேன். மன்னிக்க வேண்டும்” என்றாள்.

உடனே மந்திரி, “நான் சந்தேகப்பட்டது சரிதான். போகட்டும். இப்போதாவது உண்மையைச் சொன்னாயே! வருத்தப்படாதே” என்று கூறிவிட்டு, “பார்வதி என்ற பெண் இங்கே இருக்கிறாளா?” என்று கேட்டார்.

பார்வதி அங்கே இல்லை. உடனே ஆள் அனுப்பி, அவளை அழைத்துவரச் செய்தார்கள்.

வீட்டில் அழுதுகொண்டிருந்த பார்வதி, தனக்குப் பரிசு கிடைக்கப் போவதை அறிந்தாள். உடனே சொல்ல முடியாத மகிழ்ச்சியுடன் ஓடோடி வந்தாள். மந்திரியின் அருகே சென்றாள். அவர் அவளைத் தட்டிக் கொடுத்துப் பரிசு ரூபாய் ஐம்பதையும் அவள் கையிலே கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/17&oldid=482532" இலிருந்து மீள்விக்கப்பட்டது