பக்கம்:ரோஜாச் செடி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழைத்து வருவார்கள். முயல், மான் முதலிய பிராணிகளைத் தான் அவர்கள் அதிகமாக வேட்டையாடுவார்கள். ஏதாவது ஒரு முயல் அல்லது மானைக் கண்டுவிட்டால், உடனே வேட்டை நாயை ஏவி விடுவார்கள். அந்த நாய்களைக் கண்டாலே முயல்களுக்கும். மான்களுக்கும் கிலிதான். தலை தெறிக்க ஒட ஆரம்பித்து விடும்.

ஒரு நாள் அம்மா மான் குட்டி மானப் பார்த்து, “கண்ணு, இந்தக் காட்டிலே வேட்டை நாய் உபத்திரவம் அதிகம். அதனாலே நீ வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை செய்தது.

அதற்குக் குட்டி மான், “வேட்டை நாயா அது எப்படி யம்மா இருக்கும் ? நான் பார்த்ததே இல்லையே!” என்றது.

“நான் கூட அதைச் சரியாகப் பார்த்ததில்லை. அதைப் பார்க்கவே பயமாயிருக்குமாம்!” என்று சொன்னது அம்மா மான்.

“பயமா அது என்னம்மா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டது குட்டி மான்.

“நீயோ இளங்கன்று. உனக்குப் பயத்தைப் பற்றி என்ன தெரியும்? ஆனாலும், நாம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தூரத்தில் வேட்டைநாய் வரும் சத்தத்தைக் கேட்டால், உடனேயே நாம் எதிர்த் திசையிலே வெகு வேகமாய் ஒடிப் போய்விட வேண்டும்” என்று சொன்னது அம்மா மான்.

உடனே குட்டி மான் “அப்படியா! ஏனம்மா அப்படி ஒட வேண்டும்? அது என்ன செய்துவிடுமாம்?” என்று கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/20&oldid=482535" இலிருந்து மீள்விக்கப்பட்டது