பக்கம்:ரோஜாச் செடி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“என்ன செய்யுமா ? வேகமாக ஓடிவந்து அப்படியே ‘குபுக்’ கென்று மேலே பாயும். பாய்ந்து பல்லாலே சதையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். உடனே வலி தாங் காமல் நாம் தொப்'பென்று கீழே விழுந்து விடுவோம். அப்போது, வேட்டைக்காரர்கள் ஓடிவந்து நம்மைப் பிடித்துக்கொண்டு போய் விடுவார்கள்” என்று விளக்கிச் சொன்னது அம்மா மான்.

இதைக் கேட்டதும் குட்டி மான், “ஏனம்மா, வேட்டை நாய்க்கு நீ மட்டும்தான் பயப்படுகிறாயா ? அல்லது எல்லா மான்களுமே பயப்படுமா?” என்று கேட்டது.

“எல்லா மான்களுக்குமே பயம்தான். வேட்டை நாய்க்குப் பயப்படாத மானே இருக்காது” என்றது அம்மா மான்.

“அப்படியானால், ஆண் மான்கள் கூடவா பயப்படும் ?” என்று சந்தேகத்தோடு கேட்டது குட்டி மான்.

“ஆண் மானாவது, பெண் மானாவது? எந்த மானாயிருந்தாலும் வேட்டை நாய்க்குப் பயம்தான்” என்றது அம்மா மான்.

“ஏனம்மா ஆண் மானுக்குத்தான் கொம்பு இருக்கிறதே! அது ஏன் பயப்படவேண்டும்? வேட்டை நாய் பக்கத்திலே வந்ததும், கொம்பாலே - குத்திக் கீழே தள்ளி விடலாமே ! எனக்குக் கொம்பு முளைக்கட்டும். நான் என்ன செய்கிறேன் பார்” என்று பெருமையோடு சொன்னது குட்டி மான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/21&oldid=482536" இலிருந்து மீள்விக்கப்பட்டது