பக்கம்:ரோஜாச் செடி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வேட்டை நாய் அதே வழியாகத்தான் வந்தது. புதருக்குச் சிறிது தூரத்தில் வந்ததும், அது நின்றது. இங்கும் அங்குமாக மோப்பம் பிடித்தது. பிறகு புதருக்குப் பக்கத்திலே வந்தது. இன்னும் ஒரு விநாடியில், அது மான் குட்டி ஒளிந்திருப்பதைக் கண்டு பிடித்துவிடும் உடனே ஒரு தாவாகத் தாவி, அதன் மென்னியைப் பிடித்துவிடும்!

ஆனால், அதற்குள் ‘ஹா!’ என்ற சத்தம் கேட்டது. உடனே அந்தக் காடே கிடுகிடுத்தது. அது என்ன சத்தம்? சிங்கம்தான் அப்படிக் கர்ஜனை செய்தது. சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டதும் வேட்டை நாய் ஓடிப்போய் ஒரு மரத்தின் பின்னல் பதுங்கிக் கொண்டது.

சிறிது நேரத்தில் சிங்கம் அந்தப் பக்கமாக வந்தது. புதருக்குள் மறைந்து கொண்டிருந்த குட்டி மான் சிங்கத்தை உற்றுப் பார்த்தது. பார்த்ததும், ‘ப்பூ, இந்தச் சிங்கத்திற்குத் தானா அம்மா பயப்படுகிறாள்! இது நம்மை என்ன செய்து விடும்? இது நம் அம்மா உயரம் கூட இல்லை. தலையிலே கொம்பையும் காணோம். சத்தம்தான் பலமாகப் போடுகிறது’ என்று நினைத்தது.

சிங்கம் அப்படியும் இப்படியுமாகப் பார்த்துக் கொண்டே நடந்தது. அப்போது மரத்தின் பின்னல் ஒளிந்து கொண்டிருந்த வேட்டை நாயை அது பார்த்து விட்டது. உடனே, அது கர்ஜித்துக் கொண்டே வேட்டை நாயை நோக்கிப் பாய்ந்தது. வேட்டை நாயைக் கண்டாலே அந்தச் சிங்கத்துக்குக் கோபம் அபாரமாக வந்துவிடும். “இந்த வேட்டை நாய்களால்தானே காட்டிலுள்ள முயல்களும், மான்களும் குறைந்து கொண்டே வருகின்றன! ஆகையால், நாம் இதைச் சும்மா விடக்கூடாது” என்று நினைத்துக்கொண்டே சிங்கம் வேகமாகப் பாய்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/26&oldid=482541" இலிருந்து மீள்விக்கப்பட்டது