உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

ரோஜா இதழ்கள்

பின்புறச் சார்ப்பில் அடுப்பு எரிகிறது. ஓட்டை உடைசல் கள்ளிப் பெட்டித் துண்டுகளைத்தான் விறகாக மாட்டுகிறாள். ஒரு மண்பானையில்தான் உலை வைக்கிறாள்.

பிறகு மூலையிலிருந்த டின்னிலிருந்து நீரை முகர்ந்து புழுங்கலரிசியைக் கழுவி உலையில் போடுகிறாள்.

மைத்ரேயிக்கு இதே போல் டப்பாவில் நீர் வைத்துக் குடித்தனம் செய்ததும் சட்டியில் குழம்பு வைத்ததும் நினைவுக்கு வருகிறது. அவள் நகரத்தை ஒட்டியிருந்தாலும் கிராமத்து வாழ்க்கையிலேதான் பழகியிருக்கிறாள். எனினும் கூரைக் குடில்களில் உள்ளே காட்சிதரும் வாழ்க்கை வறுமையை அவள் அவனோடு செல்லும் வரையிலும் உணர்ந்ததில்லை. தங்கள் வீட்டோடு தொடர்பு கொண்ட எளியவர்களை, தங்கள் கூலியாட்களை அவள் கண்டிருக்கிறாள். வயலில் நடவு நாட்களில், அறுவடை நாட்களில் அந்த வீட்டுத் தோட்டத்தில் ஆண்களும் பெண்களுமாகக் கூடுவார்கள். கன்னங்கரேலென்ற குழந்தைகள், அவிழ்ந்து பிரியும் நூல் முடிச்சுக் கொத்தவரங்காய் பின்னலும், இடுப்பில் சுற்றிய வெற்றுக் கயிறுமாக புழுதியில் குழந்தைகள் விளையாடுவார்கள். கரியேறிய பானையில் புளிச் சோற்றையோ, நீர்ச் சோற்றையோ கொண்டு வந்து மரத் தடியில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றவர்களும் உண்டு. அவளுடைய அக்காள் கணவனும் களத்திலிறங்கி வயற் சேற்றில் கால்கள் பதிய வேலை செய்வதுண்டு. அவளுக்குத் தெரிந்து அவர் என்றோ செங்கற்பட்டு பட்டணம் போகும் போதுதான் வண்ணான் மடிப்பு வேட்டி உடுத்தியிருக்கிறார். என்றாலும், வறுமை மலிந்த வாழ்க்கையை அவள் இப்போதே தரிசிப்பதுபோல் தோன்றுகிறது. அன்று லட்சுமி, அவள் விட்டெறிந்த ஜிலேபியை எப்படி எடுத்துத் தின்றாள்.

அற்பமான தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாத பொருள் வறுமை நிலவும்போது, தேவைகள், தேவைகள் என்ற நிலையிலிருந்து வழுவி, ஆசைகளாக வீறு கொண்டு எழுகின்றன. அப்போது பொறுக்கும் திறனும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/80&oldid=1101913" இலிருந்து மீள்விக்கப்பட்டது