ரோமாபுரிப் பாண்டியன்
301
ரோமாபுரிப் பாண்டியன் 301 இந்த யோசனையை வளவன் சொன்ன பிறகு, அனைவருக்கும் இது சாதாரணமாகப்பட்டது. ஆனால் அது வரையில் யாருக்கும் இப்படியொரு யோசனை தோன்றவில்லை. "மக்களைத் துரத்திக் கொண்டு மன்னர் செல்வதா?" - ஒரு கேள்வி எழுந்தது. குழந்தையைத் துரத்திக் கொண்டு தாய் செல்வதில் குற்ற மில்லையே!" என்றான் வளவன். "மன்னரை மதிக்காமல் செல்கிறவர்களை மன்னர் மதித்து ஓடுவது கோழைத்தனமல்லவா? - என்றனர் சிலர். “வீரம் காட்டப்பட வேண்டிய இடம் எதிரிகளைச் சந்திக்கும் களம்! விவேகத்துக்குக் கோழைத்தனமென்று பெயரில்லை!" - இது வளவனின் பதில் "மக்கள் மன்றமே வளைத்துக் கொண்டு எதிர்க்கக் கிளம்பி விட்டால்?" "படை கொண்டு செல்லட்டுமே மன்னர்!" ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் எண்ணங்களை வளவனின் யோசனை மீது வெளியிட்ட பிறகு, கரிகாலன் ஒரு முடிவுக்கு வந்தவனைப் போல் விழிகளைத் திறந்து தலையை நிமிர்த்தினான். யாருடைய யோசனை மன்றத்திலே வெளியிடப்படக் கூடாது என்று கருதினானோ அவனுடைய யோசனையின்படி நடக்கலாம் என்று தீர்மானித்தான். 'வளவன் கூறுவதும் உண்மைதான். நான் சென்றால் தான் மக்களைத் திரும்பத் தலைநகருக்கு அழைத்து வர முடியும். என் முகத்தைக் கண்டதுமே பூம்புகார் மக்கள் வெட்கித் தலைகுனிந்து வாய் பேசாமல் திரும்பி வந்து விடுவர்' என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். மன்றத்திலுள்ளவர்களைப் பார்த்து. "நீங்கள் அனைவரும் சென்று பெருந்தேவியின் சவ அடக்கத்தைச் சிறப்பாகச் செய்து முடியுங்கள்! வேளிர்குல இளவரசியை மரியாதையுடன் உபசரியுங்கள், நான் மக்களைத் தடுத்து அழைத்து வருகிறேன்" என்று கூறிவிட்டுப் புறப்படத் தயாரானான். "படையுடன் போவதுதான் நலம்!' என்று அனைவரும் கூறினர். அதைக் கரிகாலன் கேட்கவில்லை.