ரோமாபுரிப் பாண்டியன்
625
ரோமாபுரிப் பாண்டியன் 625 'இங்கேதான் காவிரிக் கன்னி பிறந்தாள்' என்று கூறி அதற்கு 'தலைக் காவிரி' என்றும் பெயர் சூட்டி இன்று பேசி மகிழ்ந்திட்டாலும், பொன்னி கருக்கொண்டது அந்த மலைச் சுனையிலே மட்டுமா? இல்லை, குடகு நாட்டிலுள்ள 'மெர்க்காரா' - பாகமண்டலா முதலான எல்லாப் பகுதிகளி லுமே பசுமையான புல்வெளிகளையும் உயரமான காற்றாடி மரங்களை யும் போர்வையாகப் போர்த்துக் கொண்டு, விண்ணைத் தொட்டிடும் அளவுக்கு நெடுநெடுவென்று ஓங்கிநின்றிடும் குன்றுகளுக்கும், அவற்றைத் தழுவிக் கொஞ்சிடும் மேக நங்கைக்கும் பிறந்திடும் மழைக் குழந்தையே பொன்னிச் செல்வி! அந்த நாளில் இந்தக் காவிரி, யாருக்குமே அடங்கிடாத ஆண்மை மிகுந்த பெண்ணாக - ஏன், மூக்கணாங் கயிறு போடப்படாத முரட்டுக் காளையாகவே - தறிகெட்டுத் திரிந்திருக்கிறது. அதனுடைய கட்டுக்கடங்காத போக்கினால் குடகையும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளையும் சார்ந்திட்ட மக்கள் பட்டபாடுகள் கொஞ்சநஞ்சமல்ல. கடைசியில் அக்குறுநில மன்னர்களில் ஒருவன், அதற்கு ஏதேனும் ஒரு வழி கண்டு துணை புரிந்திடுமாறு சோழப் பேரரசரை அணுகியிருக்கிறான். கரிகாலன் குடகு போன்ற மேற்கு மலைத்தொடர்களைச் சார்ந்திட்ட இடங்களுக்கு ஓரளவு வடிகால் பகுதியாக விளங்குகின்ற சோழ மண்டலத்திலே, காவிரியின் போக்கினை ஒழுங்குபடுத்தி, உறுதியான கரைகளை அமைத்துவிட்டால் திடீர் திடீர் என்று திசை தடுமாறிப் பொங்குகின்ற வெள்ளத்திற்கு இரையாகின்ற குடகு நாட்டு மக்களையும் காப்பாற்றிடலாம்; அதே சமயம் சோழ மண்டலத்தையும் சோற்றுக் களஞ்சியம் ஆக்கிடலாம் என்று எண்ணிடலானார். அதற்கேற்ப காவிரி யாற்றின் சீரான ஓட்டத்திற்கென்று ஓர் அருமையான திட்டத்தினையும் அவர் உருவாக்கினார். அந்தத் திட்டத்தின் ஒரு தலையாய அங்கமே 'கல்லணை' தாம் எழுப்பிட விழைந்த கல்லணை எவ்வாறு அமைந்திடவேண்டும் என்பதனை விளக்குவதற்காக முதலில் நெட்டித் தக்கைகளைக் கொண்டு தாமே ஒரு சிறு சின்னத்தினை வடித்துக் காட்டினான் சோழப் பேரரசன். அது மிக நன்றாக அமைந்திடவே அதனையே பொற்கொல்லர்களைக் கொண்டு பசும்பொன்னிலே வைரங்களையும் பதித்து, அற்புதச் சிற்பமாகப் படைத்து மகிழ்ந்திட்டான் அவன்! சந்தனம் மணக்காது, செந்தேன் இனிக்காது என்று சாதிப்பதன் மூலமே தங்களை மேதாவிகளாகக் காட்டிக் கொள்ளும் மேட்டுக்குடியினர் எந்தக் காலத்திலும் இருந்து தான் வந்திருக்கிறார்கள் அல்லவா?