21-வது அதிகாரம்
அக்கினி பகவானுக்கு விருந்து
- சதாரம் என்னும் நாடகம் நடந்த இரவு மல்லிகா நிரம்பவும் திறமையோடு நடிக்கப் போகிறாள் என்னும் செய்தி ஊர் முழுவதும் பரவியதாகையால், அன்று கொட்டகையில் மூச்சு விடுவதற்கு இடமில்லாமல், அரண்மனையைச் சேர்ந்தோரும், அவர்களது பந்துக்களும் வந்து நிறைந்து விட்டனர். அதுவரையில் மல்லிகா எடுத்துக் கொண்ட வேஷங்கள் மிகவும் சொற்பமானவை. சதாரமோ ஆரம்ப முதல் கடைசி வரையில் வந்து சிருங்காரம், சோகம், சாகசம் முதலிய பலாம்சங்களைக் காண்பித்து நிரம்பவும் அருமையாக நடிக்க வேண்டியது. ஆகையால் அன்று அவளது வல்லமையை கண்டறிய வேண்டும் என்று ஜனங்கள் அவளது வருகையை மிகுந்த ஆவலுடன் எதிர் பார்த்திருந்தனர். கிருஷ்ணவேணியும் மல்லிகாவும் அன்றைய வேலை எப்படி முடியுமோ என்று பெரிதும் கவலை கொண்டிருந்தனர். அன்று மல்லிகா முதல் தரமான ஆடைகளையும், வைர நகைகளையும் அணிந்து கொண்டு பளீரென வீசும் காந்த விளக்கின் ஒளியில் தேஜோமயமாக கந்தருவ ஸ்திரீயைப் போலத் தோன்றினாள்.
அவள் அந்தக காட்சியில் வந்த இரண்டொரு வார்த்தைகள் சொன்ன போதே ஜனங்கள் கைகொட்டி ஆர்ப்பரித்தனர். அதன் பிறகு அவள் வரும்போதும், போகும் போதும் சோகரசம் காண்பித்த போதும், 'பேஷ் ' என்றும் 'பலே' என்றும் சொல்லி கரகோஷம் செய்தவண்ணம் இருந்தனர்.
உள்ளே இருந்த கோவிந்தசாமி ராவ், அவளுக்கு உண்டான கீர்த்தியைப் பற்றி மிகவும் பூரிப்படைந்து, அவள் வரும்போதெல்லாம் அவளைப் புகழ்ந்து உற்சாகப்படுத்தினார்.
பிறகு சவுக்கம் வாங்கிய அரசன் சதாரத்தை மணத்திற்கு வற்புறுத்தியதையும் அதற்கு அவள் இணங்காமல் மறுத்துப்