உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

வஸந்தமல்லிகா

பேசியதையும் கண்ட ஜனங்கள் அனைவரும் நிரம்ப வியப்பு அடைந்தனர்.

முதல் வரிசை நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்த பீமராவ் தனது காதலிக்கு உண்டான பெரும் புகழைப் பற்றி அடைந்த ஆநந்தத்திற்கு அளவில்லை. அவளது பேரழகையும் திறமையையும் இனிய வசனத்தையும் கர்னாமிர்தமான சங்கீதத்தையும் கண்டு அனுபவிக்க, அநுபவிக்க, அவனது காதலின் தீ மூண்டு தலைக்கேறியது. அவன் பித்தனைப் போல் ஆனான். ஆனால், பிறர் அவளைப் பார்த்து ஆர்ப்பரித்ததையும், கை கொட்டியதையும், அவளது அழகைப் பற்றிப் பேசியதையும், அவளை உற்று நோக்கியதையும் காண அவன் சகிக்கவொண்ணாத பொறாமை அடைந்தான். "இந்த ஆடுகள் ஏன் இப்படிக் கூச்சலிடுகின்றன! இவள் ஒரு குடும்ப ஸ்திரீ அல்லவா; பாயிஸா கேப்புகளின் தயவுக்காக இப்படி நடிக்கிறாள் என்பதை உணராமல், வயிற்றுப் பிழைப்புக்காக ஆடும் கூத்தாடியைப் போல் அல்லவா மதிக்கிறார்கள். மட்டிகள்! சே! இவர்களுக்கு முன்னால் இனி என்னுடைய கண்ணாட்டியை அனுப்புவதே தவறு. பொழுது விடியட்டும்; நாளை முதல் நாடகத்திற்கே வர வேண்டாம் என்று சொல்லி இவள் வருவதைத் தடுத்து விட்டு, இந்த வாரத்திற்குள் கலியாணத்தையும் முடித்து விடுகிறேன்" என்று கோபத்தோடும் பொறாமையோடும் பலவாறு தனக்குத் தானே பிதற்றிப் பல்லைக் கடித்தவண்ணம் இருந்த சமயத்தில் சவுக்கம் வாங்கிய அரசன் அவளை வற்புறுத்தியதைக் கண்டு, சிறிதும் சகியாதவனாய், "சே! என் உயிருக்குயிரான ஸுந்தரியை, எவனோ வற்புறுத்துவதை நான் பார்த்துக் கொண்டிருப்பதா! இன்றிரவு எப்படியாவது ஒழியட்டும். நான் வெளியிற் போய் விடுகிறேன்" என்று நினைத்துக் கொண்டு எழுந்து வெளியில் போய் விட்டான்.

அன்றைய நாடகத்திற்குக் கலியாணபுரம் ஜெமீந்தார் மட்டும் வரவில்லை. அவரது நண்பர் யாவரும் ஸஞ்சலாட்சியின் வேஷத்தைப் பார்த்து ஆநந்திக்கப் போய் விட்டமையால், அவருக்குப் பொழுது போவது நிரம்பவும் கடினமாக இருந்தது. அவர் தமக்குப் பொழுது போகாத சமயத்தில் ஸகாராமனிடத்தில் வாங்கிய படத்தை எடுத்து வைத்துக் கொண்டே இருப்பதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/176&oldid=1233843" இலிருந்து மீள்விக்கப்பட்டது