உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பக்காத் திருடன்

187

விட்டு வெளியில் வந்து தனது மடியில் வைக்கப்பட்ட சாஸனம் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்தவண்ணம் நடந்தான். அதை மடியில் வைத்துக் கொண்டு அவன் மோகனராவுடன் இருந்த போது நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டிருந்தவனைப் போல அவன் தனது துன்பத்தை மறைத்துக் கொண்டிருந்தான். அவ்விடத்தை விட்டு எப்போது வெளியில் வருவோம் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான். வெளியில் வந்தவன் தெற்கு ராஜவீதியில் தானும் மல்லிகாவும் தனியாக குடியிருக்கும்பொருட்டு, சென்ற சில நாட்களாக வாடகைக்கு அமர்த்தி வைக்கப்பட்டிருந்த வீட்டிற்குள் போய் வாசற்கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டு, உள்ளே இருந்த தனது அறைக்குள் நுழைந்து சாஸனத்தை எடுத்து நன்றாகப் பிரித்து ஒருதரம் படித்தான். அது சரியான சாஸனம் என்றும், அது எந்த நியாயஸ்தலத்திலும் செல்லும் என்றும், முதலில் வஸந்தராவின் பேரில் எழுதப்பட்ட சாஸனம் பிந்தியதனால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறதென்றும் உறுதி செய்து கொண்டான். தனது மனைவியான மல்லிகாவுக்கு பெருத்த ஜெமீனும் இரண்டு கோடி திரவியமும் மாளிகைகளும் வரப்போவதை நினைத்து நினைத்துக் கரைகாணா மகிழ்ச்சியடைந்து தாண்டவமாடினான். அவனது கண்கள் இரண்டும் சந்தோஷத்தினால் மலர்ந்து பிரகாசித்தன. அவ்வளவு ஐசுவரியத்தையும் பெற்ற பிறகு தான் எதைத்தான் செய்ய முடியாதென்றும், தனக்கு நிகரான பெரிய மனிதன் எவனுமில்லை என்றும், தான் மல்லிகாவை தனது இச்சைப்படி நடத்தலாம் என்றும், பலவாறு நினைத்து நினைத்து அளவளாவினான். பெற்றோர் இன்னார் என்பதையே அறியாத அநாதையும் பரம ஏழையுமான தான் தனது சாமர்த்தியத்தினாலும், தந்திரத்தினாலும் பெருத்த தனவந்தன் ஆகப்போவதை நினைத்து கட்டிலடங்காக் குதூகலமடைந்தான். தான் எப்படியாகிலும் முயன்று தனது விவாகத்தை அதி சீக்கிரத்தில் முடித்து விட வேண்டும் என்று அவன் தீர்மானித்துக் கொண்டவனாய் அன்று மாலையில் கருந்தட்டான்குடிக்கு வந்து சேர்ந்தான்.

மல்லிகா மேன் மாடத்தில், ஒரு புத்தகத்தைத் தனது கையில் வைத்துக் கொண்டு படிக்க முயன்று கொண்டிருந்தாள். அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/205&oldid=1233949" இலிருந்து மீள்விக்கப்பட்டது