25-வது அதிகாரம்
சுவர்க் கோழி
பக்கத்து வீட்டில் புதிதாகக் குடிவந்தவள் வெளியில் வந்தால் அவள் யாவளென்பதை அறிந்து கொள்ளலாமென்று நினைத்த பீமராவ் இரண்டொரு நாட்கள் அடுத்த வீட்டை கவனித்துக் கொண்டிருந்தும் பயன் உண்டாகவில்ல. உள்ளே சென்றவள் வெளியில் வராமலே இருந்தாள். அவள் நிரம்பவும் முயன்று, அவளது வேலைக்காரியுடன் பேசி, அவளது எஜமானி யாவளென்பதைக் கேட்டான். அவள் திருவடமருதூரில் ஒரு பெரிய மிராசுதாருடைய மனைவி என்றும், அவளது புருஷன் சமீப காலத்தில் இறந்து விட்டதாயும் அவள் கண் வைத்தியம் செய்து கொள்ளும் பொருட்டு தஞ்சைக்கு வந்ததாயும் வேலைக்காரி தெரிவிக்க, அதைக் கேட்டு ஒருவாறு திருப்தி அடைந்தான்.
வீட்டிற்குள் நுழைந்த ஸ்திரீயோ தனது போஜனம் முதலியவற்றை முடித்துக் கொண்ட பிறகு வேலைக்காரியை அழைத்து, "அவனுடைய அறை எதற்கு நேராக இருக்கிறது?" என்று கேட்டாள். பீமராவிருந்த வீட்டிற்கும், அவர்கள் இருந்த வீட்டிற்கும் நடுவில் இருந்த சுவரில் ஒரு பாகத்தை வேலைக்காரி எஜமானிக்குக் காட்டி, அதற்கு நேராக பீமராவின் அறை இருப்பதாகவும், அவன் அப்போதுதான் வெளியில் போனதாகவும் தெரிவித்தாள். அவர்கள் தாம் கொணர்ந்திருந்த கடப்பாரை முதலிய ஆயுதங்களை உடனே எடுத்து சுவரினருகில் வைத்துக் கொண்டார்கள். எஜமானியான தமயந்திபாயி கடப்பாறையைத் தனது கையிலெடுத்து வேலைக்காரி காட்டிய இடத்தில் சுவரை மெல்ல இடித்து ஓசையின்றி இரண்டு மூன்று கற்களைப் பெயர்த்து, பீமராவின் அறைப் பக்கத்தில் ஓர் அங்குல சதுரத்தில் ஒரு துளை செய்தாள். அதன் வழியாக பீமராவின் அறையில் நடப்பதை நன்றாகப் பார்க்கவும், பேசப்படுவதைக் கேட்கவும் அந்தத் துளை நிரம்பவும் அநுகூலமாக இருந்தது.