8
வஸந்தமல்லிகா
அப்போது துக்கோஜிராவ் உள்ளே நுழைந்தான். அவன் சுமார் 45-வயதடைந்தவனாயும், நல்ல திட சரீரம் உடையவனாயும் காணப்பட்டான். அவனது கடுகடுத்த முகம் அவன் நிரம்பவும் முன்கோபம் உடையவனென்பதை நன்றாகத் தெரிவித்தது. தாறு மாறாய்க் கிழிபட்டுக் கிடந்த துணிகளைப் பார்த்து, "கமலா! இதென்ன அமர்க்களம்! ஜவுளிக்கடையே இங்கே வந்துவிட்டாற் போலிருக்கிறதே! நான் கொடுத்த பணத்துக்கெல்லாம் துணிகளையே வாங்கிவிட்டீர்களா? கையில் பணமில்லாமல் நான் தவிக்கும் போது, குழந்தைகள் சந்தோஷமாய்ப் பண்டிகை கொண்டாடட்டுமென்று, இருந்த பணத்தை யெல்லாம் கொடுத் தேன். அதையெல்லாம் துணியில் செலவழித்துவிட்டால், மற்ற காரியங்களுக்கென்ன செய்கிறது? கமலா! உனக்கு இவ்வளவு வயதாயும் நீ என்னுடைய கஷ்ட நிஷ்டூரங்களை அறிந்து நடக்கவில்லையே!" என்றார் துக்கோஜிராவ்.
கமலா : (அலட்சியமாக) அப்பா உம்மிடம் பணமிருந்த நாளேது? நாங்கள் எதைக் கேட்டாலும் பணமிருக்கிறதில்லை. மல்லிகா பணம் வேண்டுமென்றால் உடனே அது வந்துவிடும். நாங்கள் தாயில்லாத பெண்கள்தானே! நாங்கள் ஒரு பொருட்டா பணமில்லாவிட்டால் பண்டிகை செய்ய வேண்டாமே. நிறுத்தி விடுவோமே?
ஸீதா : (விசனமாக) அம்மா உயிரோடிருந்தால் இப்படி நடக்குமா? வருஷத்துக்கு ஒருநாள் பண்டிகை வருகிறது. அதற்கு ஏதோ உபயோகமற்ற இரண்டு சீட்டித் துணிகளை வாங்கிக் கொண்டால், அதைப் பார்க்கச் சகிக்கவில்லையா?
கமலா : ஊரில் ஒவ்வொருவரும் தம்முடைய பெண்களுக்கு ஆயிரம் இரண்டாயிரத்துக்கு ஆடையாபரணங்கள் வாங்கிக் கொடுத்து புருஷன் வீட்டுக்கு அனுப்புகிறார்கள்; எங்களுக்கு ஒன்றுமில்லை, மாட்டுக்கு வைக்கோல் போடுவதைப் போல எங்களுக்கு ஒரு வயிறு சோறு போட இவ்வளவு பாடாயிருந்தால், நாங்கள் சமுத்திரத்தில் விழுந்து உயிரை விட்டு விடுகிறோம். அதன் பிறகு வருமானமெல்லாம் மிகுதியாய்ப் போகும் - என்று கண்ணிர் ததும்பிய கண்களுடன் மொழிந்தாள்.