பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககால (வட) வேங்கடம் - (1) 3. ஈன்று அணிமை கழிந்த மெல்லிய நடைவாய்ந்த பெண் யானையும் அதன் கன்றும் பசியால் வாடுகின்றன. இப்பசியைப் போக்குவதற்குப் பசிய கண்ணினையுடைய ஆண் யானை மூங்கிலின் முற்றாத முளையினைக் கொண்டு உண்பிக்கும். இத்தகைய மலைச் சாரலையுடை யது திரையனது வேங்கடமலை. அந்த நெடுவரை யில் நல்ல நாட்காலையில் மலர்ந்த வேங்கை மரத்தின் நறிய பூக்களின் துகளை அளைந்து தேனையுடைய பசிய குருந்த மரத்தின் நறுமணம் வீசும் கிளையிலிருந்து கொண்டு பொறிவசி மஞ்ஞை தன் துணையை அகவி அழைக்கும். இது நடைபெறுவது குளிர்ந்த கார்ப்பருவத் தில். இதுதான் தலைவன் திரும்பி வருவதாகக் கூறிச் சென்ற பருவம், அதற்கேற்றவாறு மழையும் பரவி நிற் கின்றது. இதனைக் காண்பாயாக’ என்று கூறித் தலை வியைத் தேற்றுகின்றாள் தோழி. நக்கீரர்பெருமான் தம் பாடலில் இந்த மலையை நெடுவரைப் பிறங்கிய வேங்கட வைப்பு’ என்று குறிப் பிடுவர். இவர் பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்ததாகப் பாடியுள்ளார். பொருள்வயிற் பிரிந்த தலைவன் சென்ற சுரநெறியைக் குறிப்பிடுங்கால் வேங்கடமலைபற்றிய குறிப்பு வரு கின்றது பல்பொறிப் புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை நரந்த நறும்பூ நாண்மலர் உதிரக் கலைப்பாய்ந்து உகளும் கல்சேர் வேங்கைத் தேங்கமழ் நெடுவரைப் பிறங்கிய வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே. - அகம்-141