பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

155


“தேவி, கொஞ்சம் வலிமை வந்ததும் அதுவே ஓடிவிடும். நீங்கள் அஞ்ச வேண்டாம். ஏனெனில் இது அண்டி வாழும் மிருகம் அல்ல.” என்று சம்பூகன் முற்றும் உணர்ந்தவனாக உறுதி கூறுகிறான்.

பிள்ளைகள் மாதுலன் அருகில், இசைக்கு வசப்பட்டவர்கள் போல் அமைதியாக இருக்கிறார்கள்.

மாதுலன் தன் கைகளால் அவர்கள் முகத்தை, மேனியை வருடுகிறான். பிறகு, தன் குழலை அவர்கள் வாயில் வைக்கிறான்.

குழந்தைகள் அரும்புப் பற்களைக் காட்டிச் சிரித்து மகிழ்கிறார்கள்.

பெரியன்னை கட்டியணைத்து முத்தமிடுகிறாள்.

“நீங்கள் இந்த இடத்தில் இருந்து அன்பால் உலகாள வேண்டும்” என்று ஆசி மொழிகிறாள்.

சூழலும், வாழ்முறையும், இயல்பை மாற்றுமா? குழந்தைகளின் முரட்டுத்தனத்தை மாற்றுவதில், பெரியன்னை மிகக் கருத்தாக இருக்கிறாள். பூமகளுக்கும் இது மிகவும் உகப்பாக இருக்கிறது. தானியத்தை உரலில் இட்டு அவள் மெதுவாகக் குத்துகிறாள்.

மர உலக்கையின் ஒசை நயத்துக்கேற்ப பிள்ளைகள் கை கொட்டி ஆடும்படி பெரியன்னை பாடுகிறாள்.

          கை கொட்டு ராசா, கை கொட்டு!
          காட்டு சனமெல்லாம் கை கொட்டு!
          வானத்துச் சந்திரன் கை கொட்டு!
          வண்ணம் குலுங்கக் கை கொட்டு.

குழந்தைகள் இருவரில் குண்டுப்பையன் தொந்தி சரியக் குலுங்குகிறான். சதைப்பிடிப்பில்லாதவனோ, எழும்பி எழும்பிக் குதிக்கிறான். பூமியில் சிற்றடிபதிகையிலேயே துள்ளும் அழகு காணக் காணப் பரவசம் அடைகிறாள்.