பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

வனதேவியின் மைந்தர்கள்

எத்தனை இன்பங்களை இசைத்திருக்கிறதென்று எண்ணியவாறு, அவள் நிற்கையில் சத்திய முனி கேட்கிறார்.

“இந்த அமுத இசையை இங்கே யார் இசைக்கிறார்கள்? நான் இந்தக் கானகம் விட்டுச் சென்று ஐந்து கோடைகளும் மாரிக்காலங்களும் கழிந்துவிட்டன. எனக்குத் தெரிந்து குரலெடுத்து நந்தன் பாடுவது அமுதகானமாக இருக்கும். சம்பூகன். சம்பூகனோ?”

“இப்போது ஊதுபவன் சம்பூகனில்லை சுவாமி. ஆனால் அவன்தான் இதை ஊதும் மாதுலனுக்குக் குழலை வாயில் வைத்து இசைக்கப் பயிற்றியவன்...”

நந்தபிரும் மசாரி இசை எங்கிருந்து வருகிறது என்று தேடுபவர்போல் பார்க்கிறார்.

“மாதுலன்... நெய்கியின் நான்காவது பிள்ளை. இதன் அப்பன் வேதவதியை வெள்ளத்தில் கடக்கும்போது, போய்விட்டான். முதல் மூன்று பெண்களில் ஒன்று மரித்துவிட்டது! இது, வனதேவியின் வரமாக வந்திருக்கிறது. யாரேனும் அந்நியர் வருகிறார் என்றால் வெட்கப்பட்டு மறைவான்... அடி, சோமா, வாருணி! அவன் இங்கேதான் இருப்பான், அழைத்து வாருங்கள்!” என்று பெரியன்னை விவரிக்கிறாள்.

“அற்புதம் பூச்சிக்காட்டில் உருக்கும் அமுத இசை பொழியும் சிறுவன்...” என்று அவர் வியந்து கொள்கிறார்.

பூமகளுக்கு வானிலே ஏதோ பறவைகள் பறப்பதுபோலும், வண்ண மலர்க் கலவைகள் வான்வெளியெங்கும் நிறைவது போலும், அமுதத்துளிகளை உடலின் ஒவ்வோர் அணுவும் நுகருவது போலும் தோன்றுகிறது. இந்தப் பண்... எப்படிப் பிறக்கிறது?... என்னென்னவோ கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், சொற்கள் உருவாகவில்லை. இங்கே பெண் விருப்பப்படி மகவைப் பெற்றுக் கொள்கிறாளே! யாரும் யாரையும் ஆக்கரமிக்கும் இயல்பே இல்லை. மரங்கள் பருவத்தில் பொல்லென்று பூப்பதுபோல் அது இதழ் உதிர்த்துப் பிஞ்சுக்கு இடமளிப்பது போல் எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்