பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

171

பட்டிருக்கும். சில சமயங்கள் ஒட்டடைகள் களையப்படும். இப்படிக் கானகத்தில் வந்து விழுபவர்கள் உண்டு. யாவாலி பட்டயம் போட்ட அடிமை உத்தமமான ஒரு பிள்ளையை அவள் உருவாக்கினாள். அவன் ராச ஊழியம் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை; அரசனாக வேண்டும் என்றும் நினைக்கவில்லை; மனிதனாக்க வேண்டும்; அடிமைக்குலம், இழிகுலம் என்ற நாண் அறுபட வேண்டும் என்று எண்ணினாள். முப்புரிநூலுக்கு இவனும் தகுதியாக வேண்டும் என்று வளர்த்தாள். அந்த மகன் முப்புரிநூல் இல்லாமலே, நல்ல மனிதர்களை உருவாக்குகிறான். முப்புரிநூலே அகங்காரத்தின் சின்னமாகிவிட்டது. மகளே...

பூமகள் பேசவில்லை.

தோல் மேடிட்ட இரணங்களைக் கிளறுவதில் என்ன பயன்?

ஏனெனில் இந்த இரணங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் மிக ஆழமான அடித்தளம் கொண்டிருக்கின்றன. அவற்றை அசைப்பது, எளிதல்ல. இந்த ஆசிரமம் அவளுக்கு மிகவும் இசைந்ததாக, அச்சமே இல்லாத பாதுகாப்புடன் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு திங்கள் மாறுதலுக்கு என்று வந்தவர்கள், குளிர்காலம் முழுவதும் தங்கி இருக்கிறார்கள். பிள்ளைகள் இருவரும், இங்கேயுள்ள வேடுவப் பிள்ளைகளுடனும் பெண்களுடனும் ஓடியாடி மழலைபேசி, பாடி, அந்தச் சூழலுக்கே உயிரூட்டுகிறார்கள்.

இளவேனில் துவக்கத்தில் புதிய தளிர்கள், புதிய அரும்புகள் கானகச் சூழலையே மாற்றுகின்றன. இணைதேடும் பறவைகள்; விலங்கினங்கள்... மண்ணே புதிய மணம் கொண்டு வீசுவதுபோன்ற மலர்கள் இதழ்களை உதிர்க்கின்றன. நள்ளிரவில் மலர்ந்து மணம் சொரிந்துவிட்டு, காலையில் மண்ணில் விழும் மலர்களை எடுத்துக் காலில் மிதிபடாதபடி பூமகள் சேகரிக்கிறாள். ‘நீங்கள் இந்த மனிதர்கள் காலடி படாத இடங்களில் உதிரக்கூடாதா?’ என்று ஒவ்வொரு மலரையும் கண்களில்ஒத்திக் கொள்கிறாள். வழித்தடம் முழுதும், பவள மல்லிகை, மரமல்லிகை மலர்கள்