பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

211

"கண்ணம்மா.”

முதியவளின் குரல் நடுங்குகிறது.

பூமகள் விரைந்து அவள் பக்கம் சென்று அன்புடன் அணைக்கிறாள்.

“உனக்கு ஏனம்மா இத்தனை சோதனைகள்? ஆறு தாண்டி அசுவமேதக் குதிரையை அனுப்பலாமா? உன்னிடமிருந்து பிள்ளைகளைக் கவர்ந்து செல்ல இது ஒரு தந்திரமா? குழந்தாய், உன் பிள்ளைகள் இளவரசுப் பட்டம் சூட்டிக் கொண்டு அரசாளும் பேறு பெற வேண்டாமா? தவறை உணர்ந்து உன்னையும் அழைத்துச் செல்வார்களோ?”

பூமகளுக்கு இதயம் வெடித்து விடும் போல் கனக்கிறது.

“தாயே, அப்படியானால் யாகத்துக்குப் பொற் பிரதிமை செய்து வைப்பார்களா?”

தாய் விக்கித்துப் போனாற்போல் அமர்ந்திருக்கிறாள்.

“பொற் பிரதிமையின் கையில் புல்லைக் கொடுத்தால் அது பெற்றுக் கொள்ளுமோ? இவர்களுக்கு உயிரில்லாத பொம்மை போதும்.... இப்படி ஓர் அநீதி, பெண்ணுக்கு நடக்குமா? இவன் சக்கரவர்த்தி, குல குருக்கள், அமைச்சர் பிரதானிகள், பெண் மக்கள்.... யாருக்குமே இதைக் கேட்க நாவில்லையா? ஒரு தாய் வயிற்றில் அவள் சதையில் ஊறி, அவள் நிணம் குடித்து, உருவானவர்கள் தாமே அத்தனை ஆண்களும்? அவர்கள் வித்தை ஏந்தவும் ஒரு பெண்தானே வேண்டி இருக்கிறது? அப்போது தங்கப் பிரதிமை உயிருடன் வேண்டும்! இதெல்லாம் என்ன யாகம்? உயிரில்லா யாகம்! பசுவை குதிரையைக் கொல்லும் யாகம்! தருமமா இது.....”

பூமகள் இந்தச் சூனியமான நிலையில் இருந்து விடுபடுபவள் போல், பிள்ளைகளைத் தேடிச் செல்கிறாள். அப்போதுதான் அன்று தானிய அறுவடை நாள் என்று கூறியது நினைவுக்கு வருகிறது. பிள்ளைகள் விளை நிலத்தில் கதிர்கள் கொய்கிறார்கள்.