பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

வனதேவியின் மைந்தர்கள்

அஜயனும் விஜயனும் அந்தக் கூட்டத்தில், தனியாகத் தெரிகிறார்கள். உழைப்பினால் மேனி கறுத்தாலும், கூரிய நாசியும், உயரமும் அவர்கள் வித்தியாசமானவர்கள் என்று தோற்றம் விள்ளுகிறது.

ஆனால், இவர்கள் ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் அறுத்த கதிர்களை ஒருபுறம் அடுக்குகிறார்கள். புல்லியும், கவுந்தியும் பெரியவர்களாக நின்று கதிர்களில் இருந்து சிவந்த மணிகள் போன்ற தானியங்களைத் தட்டுகிறார்கள்.

பிள்ளைகள் கையில் அள்ளி இந்தப் பச்சைத்தானியத்தை வாயில் போட்டு மென்று கொண்டே பால் வழியும் கடை வாய்களுடன் உழைப்பின் பயனை, எடுக்கிறார்கள். மேலே பறவைக்கூட்டம் எனக்கு உனக்கு என்று கூச்சல் போடுகின்றன.

புல்லி ஒரு வைக்கோல் பிரியை ஆட்டி விரட்டுகிறாள்.

“இத இப்ப எல்லாத்தையுமா எடுப்போம்? நீங்க தின்ன மிச்சந்தான். எங்களுக்கு இது குடுக்கலேன்னா, உங்களையே புடிப்போம். ஓடிப்போங்க!” என்று அவற்றுடன் பேசுகிறாள்.

“வனதேவி. வாங்க. இன்னைக்கு, இதெல்லாம் கொண்டு போட்டிட்டு, நாளைக்குப் பொங்கல். எங்க முற்றத்தில், எல்லாரும் சந்தோசமா பூமிக்குப் படைச்சி, விருந்தாடுவோம்.”

பூமகள் சுற்று முற்றும் பார்க்கிறாள்.

“குதிரை எங்கே?. மாடுகள் மேயும் இடங்களில் இருக்குமோ?”

“மாடுகள் இங்கே இல்லை. இருந்தால் எல்லாத் தானியத்தையும் தின்று போடும். அங்கே விரட்டி விட்டிருக்கிறோம். குதிரையை, தோப்புப்பக்கம் கட்டிப் போட்டு, காவல் இருக்கிறாங்க யாரோ சொன்னார்களாம், ராசா வந்திருக்கிறாரு, புடிச்சிட்டுப் போவாங்கன்னு நம்ம இடத்துல அது வந்திருக்குவுடறதில்லைன்னு சொல்லி, அந்தப் பக்கத்துப் பிள்ளைங்க புடிச்சிக் கட்டிப் போட்டிருக்காங்களாம்.”