பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

வனதேவியின் மைந்தர்கள்

அரசகுமாரன் இருக்கிறான். அங்கிருந்து பார்க்கையில், எட்ட, குதிரை வெள்ளையாக நிற்பது தெரிகிறது. காவலர்கள் ஏழெட்டுப் பேர் இருக்கின்றனர். ஒருவன் மூட்டு முறிவில், பச்சிலை போட்டுக் கொண்டு குந்தி இருக்கிறான்.

அப்போது, பல வண்ணங்களுடைய கொண்டையுடன் வால் நீண்ட காட்டுச் சேவல் ஒன்று கண்கவரும் வகையில் பறந்து, ஓரத்தில் உள்ள மரத்தில் அமருகிறது.

“இந்த வனம் மிக அழகாக இருக்கிறது...” என்று அரச குமாரன் கூறுகிறான்.

“உங்கள் அரண்மனைத் தோட்டத்தை விடவா?”

“... அரண்மனைத் தோட்டம் அழகுதான். அங்கு இப்படிச் சேவல், அழகாகப் பறந்து செல்லாது. கூட்டமாக மான்கள் போவதைப் பார்க்க முடியாது.”

அஜயன் புருவங்களை சுருக்கிக் கொண்டு பார்க்கிறான்.

“ஏன்? தோட்டத்துக்கப்பால் வனங்கள் இருந்தால் மான்கள் வரும் இல்லையா? இங்கே எல்லா விலங்குகளும் வரும்...”

“நீங்கள் வேட்டையாட மாட்டீர்களா?...”

“வீணாக எதற்கு வேட்டையாட வேண்டும்? மான்கள், பறவைகள் எல்லாமே அழகு...... ஆனால் எப்போதேனும் வலை வைத்து, பன்றி அல்லது எருமை பிடிப்பார்கள். நாங்கள் வில் அம்பு வைத்து அடிக்க மாட்டோம்...”

“ஏன்? நீங்கள் வில் வித்தை பயிலவில்லையா? உங்கள் குரு என்று சொல்கிறீர்கள். நீங்கள் க்ஷத்திரியர் போலும் இருக்கிறீர்கள்; அந்தணர் போலும் பேசுகிறீர்கள். விசுவாமித்திரர் க்ஷத்திரியர்; அவர் ராஜருஷியானார். காயத்ரி மந்திரமே அவர் அருளிச் செய்தது. எங்கள் குல குரு உயர் குலம்...”

“அதனால் மான்களை வேட்டையாடச் சொல்லிக் கொடுப்பார்களா?” என்று அஜயன் கேட்கிறான்; விஜயன் சிரிக்கிறான். வேடப்பிள்ளைகள் எல்லோரும் சிரிக்கிறார்கள்.