பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

231

“யாரை என்று குறி இல்லை. ஆறு கடந்து அவர்கள் கூடாரத்துக்கு முன் நின்று கூப்பிடுவேன். கோழை போல் பகபட்சிகளைச் சாக அடிக்கும் மந்திய அம்பு விட்டிருக்கிறாயே, என் எதிரே வா’ என்று கூப்பிடுவேன்.”

“வேண்டாம், மாயா நான் சொல்வதைக் கேள்! சத்திய குரு வந்துவிடுவார்.அவர் வந்ததும் அவர் சொல் கேட்டு நடப்போம்!”

“அதற்குள் நம் வனம் அழியும். வனதேவி, என்னைத் தடுக்காதீர்கள்!”

அவன் விரைந்து போகிறான்.

பிள்ளைகளை அவள் தடுத்தும் அவர்கள் செவிசாய்க்க வில்லை. நந்தமுனியோ, தனியிடத்தில் அமர்ந்து, ஒற்றை நாணை மீட்டிய மவுனத்துள் மூழ்குகிறார்.

பூமகள் முதியவளிடம் வந்து அரற்றுகிறாள்.

“அம்மா, மந்திர அஸ்திரம் பச்சையை அழிக்குமோ?”

“எனக்கென்னம்மா தெரியும்? நீதான் க்ஷத்திரியநாயகனுடன் வாழ்ந்தவள். பெரிய பெரிய போர்களை, வதங்களை, அஸ்திர சாகசங்களைக் கண்டிருக்கிறாய்!”

அவளுக்கு நினைவுக்கு வருகிறது. ஒர் அரக்கன், ஒடிச் சென்று கடலில் வீழ்ந்து வீழ்ந்து எழுந்தானாம். அப்படி அத்திரம் துரத்திச் சென்றதாம். அது, தீயாய் வெப்பம் உமிழுமோ?.

மனம் பதைப்பதைக்கிறது. இந்தக் கவடறியாப் பிள்ளைகளின் மேனி கருகும் வெப்பத்தை உமிழும் அத்திர வித்தைகளை அவிழ்த்து விடுவார்களோ, தெய்வமே! வானத்தில் இருந்து ஆட்சி செய்யும் மாசக்தியே! நீ கொடுப்பது தானே வெப்பக்கதிர்? அது இவ்வாறு மனிதநேயமற்ற செயல்களுக்கு உதவலாமோ? மந்திரமாக இருந்தால் அது பயன்படாதவாறு நீயே தடுப்பாய்? ஒரு மழையைப் பொழிவிப்பாய். குளிர் காற்றோடு எங்கள் உள்ளங்களைக் குளிரச் செய்வாய்.” என்று பலவாறு வேண்டி