பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

வனதேவியின் மைந்தர்கள்

நிற்கிறாள். அன்று முழுவதும் அவள் தீயை உயிர்ப்பிக்கவில்லை. பிள்ளைகளுக்காக உணவு சேகரித்துப் பக்குவம் செய்யவில்லை.

வானில் கருமேகங்கள் கவிந்தாற்போல் ஒளி மங்குகிறது. ஒரே இறுக்கம். ஓர் இலை அசையவில்லை. ஓர் உயிரின் சலசலப்பும் தெரியவில்லை. நந்தமுனியைத் தேடி அவள் செல்கிறாள். அவர் மரத்தடியில் வீற்றிருந்த கோலத்தில் காணப்படவில்லை.

நீண்ட மவுனம். நீண்ட நீண்ட நிழல்கள் தென்படவில்லை கிழட்டுக் காத்யாயனியப் பசுவும், பெரியன்னையும் மூச்சுப் பேச்சின்றி முடங்கி இருக்கிறார்கள். அந்த அரக்கர்கோனுடனான போரின் போது கூட அவள் மனமழியவில்லையே? இப்போது. இது போரும் இல்லை... அமைதியும் இல்லை. போர்க்களத்துக்குப் பெண்கள் சென்றதாக அவள் அறிந்திருக்கவில்லை.

எனினும், உயிரின் ஒரு பகுதியாகவே உள்ள பிள்ளைகள் அவளிடம் இருந்து பறிக்கப் படுவார்களோ? இரவும் பகலுமாக ஒரு நாள் செல்கிறது. இருப்புக் கொள்ளவில்லை.

பூமகள் ஓடுகிறாள். வாழைவனம் தாண்டி, கருப்பஞ் சோலைகள் சின்னபின்னமாக்கப்பட்ட பகுதிகள் கடந்து, பெரிய ஆலமரம்... அங்கே என்ன நடக்கிறது? அவள் காலடியில், அந்தி மங்கும் அந்த நேரத்தில் யாரோ விழுந்து கிடப்பது புலனாகிறது. நா அண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது. ஒரு காவலன் வீழ்ந்திருக்கிறான். எங்கு பார்த்தாலும் மரக்கிளைகள் முட்செடிகள் ஒடிந்து கிடக்கின்றன.

மங்கிவரும் பொழுதில் இனம் புரியாத ஒரு வேடப்பிள்ளை விரைந்து வருகிறான். அவள் கையைப் பற்றி இழுத்துச் செல்கிறான். “வனதேவி, அங்கே சண்டை நடக்கிறது. அவர்கள் அம்பு போட்டு நம் மாடுகளைக் கொன்று விட்டார்கள். நீலனும், மாலியும் மரங்களை ஒடித்து அவர்களை அடித்தார்கள். குருசுவாமி சொல்லாமல் வில் அம்பைத் தொடக்கூடாதல்லவா? இப்ப மாயன் அம்பு விட்டு எல்லோரையும் ஆற்றுக்கு அக்கரையில் துரத்திவிட்டான்... ஆற்றில் காவலர் ஒருவர் விழுந்து

போய்விட்டார்...”