பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

233

"அஜயன் விஜயன் எங்கே? நந்தகவாமி போரிடச் சொன்னாரா?”

“நந்தசுவாமி படகில் அக்கரை செல்கிறார். அஜயனும் விஜயனும் அவருடன் செல்கின்றனர். அங்கே போய் நியாயம் பேசப் போகிறார்கள். வனதேவி, நம் பசுக்கள் கன்றுகள், காளைகள் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து அந்தக் காவலர்கள் கொல்கையில் நம்மால் கைகட்டிக் கொண்டு இருக்க முடியுமா? அங்கே வந்து பாருங்கள்!”

அவன் அவளை அழைத்துச் செல்கிறான். மேய்ச்சல் இடம். மங்கி வரும் இருளில், ஏதோ கனவுக்காட்சிபோல், மாடுகள், உயிர் கொடுக்கும், உணவு கொடுக்கும், உழைப்பாளி மாடுகள் மலைமலையாகச் சாய்ந்து கிடக்க, காகங்கள் அவற்றின் மீது குந்திப் பறந்து சோகமாகக் கரையும் காட்சியைக் காண்கிறாள். ‘உம்மீது குந்தி இருந்து விருந்தாடுவோமே, உங்கள் உடல்களில் சிலிர்ப்போடும் போது எங்களுக்கும் அது ஓர் அநுபவமாக இருக்குமே, இப்போது உயிரோட்டம் இல்லாமல் விழுந்து விட்டீர்களே என்று அவை கரைவதாகத் தோன்றுகிறது. கண்ணீர் குருதிபோல் பொங்குகிறது. குடிலுக்குத் திரும்பி வந்தவளின் விம்மல் ஒலி முதியவளை உலுக்குகிறது.

புல்லி வந்து ஒளித்திரி ஏற்றி வைக்கிறாள்.

“கண்ணம்மா, குழந்தாய்...” நடுங்குகிறது.

“இந்நேரம் உன் பிள்ளைகள் யாரென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கும். இவர்கள் பக்கம் குதிரை அவர்கள் விரட்டாமல் வந்ததும் நன்மைக்கே... இப்போது, உன் நாயகனோ, மைத்துனர்களோ வரக்கூடும். பிள்ளைகளை அவர்களுடன் அனுப்பிவிடம்மா! அவர்கள் நாடாளும் வம்சம் ஒளிரட்டும்!” பூமகள் இறுகிப் போகிறாள்.

அந்த அழுத்தத்தினிடையே இருந்து சன்னமான நாண் எழுப்பினாற் போன்று உறுதியான குரல் ஒன்று ஒலிக்கிறது.