பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

வனதேவியின் மைந்தர்கள்

“மகளே, கலங்காதே...” என்று அவளுக்கு ஆறுதல் சொல்கிறாரா?... புன்னகை வாடாத சாந்தம் ததும்பும் முகம். முடி அதிகமில்லாத தாடி, ஒட்டிய தாடைகள் கண்கள்... எல்லா உலகமும் அமைதியுடன் வாழவேண்டும் என்று பாட்டிசைத்த அந்த நா.... எல்லாம் நிலைத்து விட்டன.வேதவதியே, நீ ஓடுகிறாயே, உனக்கு இது தகுமா? அஜயன் அவர் விலாவில் அம்புதைத்த இடம் பார்க்கிறான். யாரோ அந்த நாசகார அம்பைக் கொண்டு வருகிறார்கள். தம்புர்... ஒற்றை நாண், அது ஓய்ந்து விட்டது.

சம்பூகனை இழந்தபோது சோகம் கரைபுரண்டுவர அரற்றினாள். இப்போது நாவே எழவில்லை.

இளமைப்பருவ நினைவுகள் படலங்களாக உயிர்க்கின்றன. அவர் மடியில் அமர்ந்து, மழலையில், “தாயே, தயாபரி...” என்று அவருடன் இணைந்து பாடியதும், அந்த ஒற்றை நாணை பிஞ்சு விரலால் மீட்டியதும் நினைவில் வருகிறது.

“என் தாய் யார் சுவாமி?”

“இந்த பூமிதான். நீ பூமகள், பூமிஜா, பூமா... எல்லாம் நீதான்!” என்று சிரிப்பார்.

“காட்டிலே எப்படி பயமில்லாமல் இருப்பீர்? பாம்பு, யானை, புலி, சிங்கம் எல்லாம் இருக்குமே?”

“அவையும் இந்த பூமியில் வாழலாமே? இந்த பூமித்தாய் அவற்றையும் படைத்திருக்கிறாள் அல்லவா?...”

நீண்ட முகம்... கூர்மையான நாசி... ஒழுங்கில்லாத பற்கள்... அந்நாள் பார்த்த அதே வடிவம், சிறிதும் மாறவில்லை. மேல்முடியைக் கோதி உச்சியில் சுற்றி இருக்கிறார். அதில் எப்போதுமே அடர்த்தி இல்லை...வற்றி மெலிந்த மார்புக் கூடு.... அது எழும்பித் தணியவில்லை.

சோகம் தன்னைச் சுற்றிப் பிரளயமாகக் கவிந்தபோதும் அவள் அசையவில்லை. யாரோ, மாதுலனைத் தூக்கி வருகிறார்கள். அவளால் நடக்க முடியவில்லை. அதனால் தூக்கி வந்து அவள் அருகில் அமர்த்துகிறார்கள்.