பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

வனதேவியின் மைந்தர்கள்

அவன் பழிவாங்கத் துடிக்கிறான். மின்னலைத் தொடர்ந்து இடி வரும்.

இடி வருகிறது. அண்ட சராசரங்களை உருட்டிப்புரட்டும் இடி

மிதுனபுரிப் பெண்படை சந்திரகேதுவின் படையோடு மோதுகிறது.

தலைகள் உருள்கின்றன; பயிர்கள் அழிகின்றன: வனவிலங்குகள் அமைதி குலைந்து தறி கெட்டு ஒடுகின்றன. வேதவதியில் குருதி கலக்கிறது.

அஜயனும் விஜயனும் சோமனும், வேதவதிக்கரை, எல்லைக் கோட்டில், தங்கள் வில்-அம்பு கொலைக் கருவிகளுடன் நிற்கின்றனர்.

இவர்கள் அனைவருமே யாவாலி அன்னையின் ஆசிரமத்தில்தான் குடியேறி இருக்கிறார்கள்.

கேகயத்து மாதாவும், பெரியன்னையும், ஒருபுறம் முடங்கி இருக்கிறார்கள். அவந்திகா, கின்னரி, ரீமு, ஆகியோர் உணவு தயாரிப்பதும் நீர் கொண்டு வருவதுமாக இயங்குகின்றனர்.

சத்திய முனியும் பிள்ளைகளுக்குக் காவல் போல் செல்கிறார்

அன்று வானம் கறுத்து, மழைக்காலத்தின் துவக்கத்தை அறிவிக்கிறது.

ஆவணிப் பெளர்ணமிக்கு இன்னமும் நாட்கள் இருக்கின்றன.

இவ்வாண்டு முன்னதாக மழைகாலம் தொடங்கிவிடுமோ?

எரிபொருள், காய்-கனி-கிழங்குகள். முன்னதாகச் சேமித்துச் கொள்வார்கள், இவ்வாண்டு.

“பிள்ளைகளே, நாம் இன்று உணவு சேகரித்து வருவோம்!” என்று அழைக்கிறார்.