பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

வனதேவியின் மைந்தர்கள்

பெரிய கொட்டிலில் அமர்ந்து முனிவர் அவர்களுக்கெல்லாம் பாடல்களாகக் கல்வி கற்பிப்பார். அவர்களும் சேர்ந்திசைப்பார்கள்.

பூமகள், அவர்கள் அருகில் இருப்பதால், ‘மழையே, நீவாழ்க! எங்கள் இன்னல்களை நீயே இப்போதைக்குத் துடைக்கிறாய்!” என்று வாழ்த்துகிறாள். வீட்டைச் சுற்றி நச்சமைந்த நாகங்களும், கொடிய விலங்குகளும் சூழ்ந்தாலும் அச்சமில்லை. ஆனால், அக்கரையில் உள்ள படைகள் இங்கே வரலாகாது. இத்துணை குழப்பங்களுக்கும் தானே காரணம் என்பதை உணர்ந்திராத அந்த வெள்ளைக் குதிரையும் அவர்கள் வளைவில் மரத்தடியில் வந்து ஒதுங்குகிறது.

“அம்மா, குதிரை வந்திருக்கிறது!’ என்று அவந்திகா கத்துகிறாள்.

“அடித்து விரட்டு!” என்று கடித்துத் துப்புகிறாள் கேகய அன்னை.

“குதிரை என்ன செய்யும்? அது காட்டில் திரிந்த பிராணிதானே? நாடுபிடிக்க ஒடிவா என்று மனிதர் சொன்னதைக் கேட்காதது அதன் உரிமை இல்லையா?”

“தாயே, நீங்கள் யார் என்று தெரியவில்லை. சத்திய முனிவர் யாவாலி அன்னை பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். நந்தமுனியும் பூமையின் இளம்பருவத்தில் இருந்தே அறிமுகமானவர். ஆனால் தாங்கள்.”

“நானும் நல்லது செய்கிறேன் என்று ஒரு பாவத்தைச் செய்தேன். எதற்காக இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று புரியவில்லை சகோதரி!”

“காரணம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. இந்தப் பன்னிரண்டாண்டுகள், இந்த அவந்திகாவும் நானும், நினைத்து நினைத்து வெதும்பிக் கொண்டிருந்தோம். கோத்திரம் அறியாதவர், கோத்திரம் அறிந்தவர் எல்லோருக்கும் நியாயங்கள்