பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

23

அவள் இதயத்தை முறுக்கிப் பிழிவது போல் இருக்கிறது. அவள் ஏற்றிவைத்திருந்த திரி அணைந்து போனதை எப்படிச் சொல்வாள்?

“அவந்திகா! உள்ளே எல்லாத்திரிகளையும் ஏற்றச் சொல் வாய்! சுவாமி, அமுதுகொள்ள உள்ளே வரவேண்டும்.”

அவந்திகா, ‘இந்நேரத்தில் திரிகளை ஏற்றச்சொல்’ என்ற ஆணையை ஏற்கத் திகைப்பது புரியவுமில்லை; புரியாமலுமில்லை.

“குழந்தாய், எனக்கு உள்ளே வருவதைக் காட்டிலும் இந்த இருக்கையே மனம் நிறைந்த ஆறுதலைத்தருகிறது. உன் முகம் பார்த்த மகிழ்ச்சியே போதும். நீ படைக்கும் அமுது எனக்கு கிடைத்தற்கரிய இன்னமுது. இங்கேயே அதைக் கொள்கிறேன் மகளே!”

மாதுளை, கொய்யா, வாழை ஆகிய கனிகள் திருத்தப்பட்டு உணவுக் கலத்தில் கொண்டுவரப்படுகின்றன. தேன், பால், பருகுநீர் வருகின்றன. சுவைமிகுந்த வெண்ணெய்க்கனி பிளந்தாற் போன்று விரித்து வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே கறுப்பு விதைகள். இடை முழுதும் வெண்ணெயில் தேன் பெய்த சுவையுள்ள சதை.

அவள் ஒவ்வொன்றாக அவர் கையில் எடுத்து வைக்கு முன் அவர், தன் சுருதி மீட்டும் குடுவையில் இருந்து ஒரு புதையல் போன்ற பொருளை எடுக்கிறார். சிவப்பும் கறுப்புமாகக் கல்லிழைத்த குணுக்குப் போன்ற கனிக்கொத்து.

“மகளே? உனக்கு நான் எப்போதும் கொண்டுவரும் பரிசு...” அவள் ஆவலோடு அதை நாவில் வைத்து ருசிக்கிறாள். கண்ணீர் இனிப்பும் கரிப்புமாக வழிகிறது.

“தந்தையே, தாயே, எத்தனையோ இடங்களில் அலைந்து விட்டோம். இந்தச் சுவையை நான் உணர்ந்ததில்லை. பெரியம்மா, கைநிறையக் கொண்டு வருவார்கள். தம் ஆடை மடியில் புதையலாக வைத்துத் தருவார்கள். அவர் கழுத்தைக்கட்டிக் கொண்டு முத்தம் வைப்பேன். ஊர்மி கேட்டால் ஒன்று கூடக் கொடுக்கமாட்டேன். ஆடையை விரித்து அதில் அந்த பழங்களைச் சித்திரம் போல் வைத்து ஒவ்வொன்றாக ருசிப்பேன்....