பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

வனதேவியின் மைந்தர்கள்

பாவத்தின் கருநிழல் எங்கே தொடங்கியது என்று புரிந்து கொள்ளட்டும்!”

“அம்மா..!” என்று நடுங்கும் குரலுடன் அவள் காலில் வீழ்ந்து பணிகிறாள்.

“அதெல்லாம் தெரியாத உண்மைகளாக மேடிட்ட குவியல்களுள் இருக்கட்டும் தாயே!”

அந்த அன்னை, அன்புடன் அவள் முகத்தில் விழுந்தலையும் கூந்தலை ஒதுக்குகிறாள். “வாழ்நாளெல்லாம் தவக்கோலத்தில் கழியும் உன்னால் இந்த மனித குலமும் பாவனமாகிறதம்மா! குமரப்பருவத்தின் தலை வாயிலில் நிற்கும் பிள்ளைகள் தம் தந்தையின் செய்கை பற்றி அறியட்டும்! அசுவமேதக் குதிரை, அவர்களுக்கு உயிர்கொடுத்த தந்தையின் அரசிலிருந்து ஏவிவிடப் பட்டதென்று அறியட்டும்! உயிர் விளக்கை இருட்கானகத்துக்கு அனுப்பிவிட்டு உயிரில்லாப் பொற்பதுமையை வைத்து வேள்வி செய்யும் பொய்மையை உணரட்டும்!. குழந்தாய், உனக்கிழைக் கப்பட்ட இந்த அநீதி உலகறிய வேண்டும்.”

கிளர்ந்தெழுந்த சொற்கள் எதிரொலியில்லாமல் நிற்கின்றன. அன்னைக்கு மூச்சு வாங்குகிறது. மரக்குவளையில் நீர் கேட்டு வாங்கி அருந்துகிறாள்.

சத்திய முனியும் அங்கே நிற்கிறார். “மகளே, உன் மைந்தர்களின் எதிர்காலம் பற்றி நீ எதுவும் சிந்திக்கவில்லையா?.”

அவள் தரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். “தாங்கள் போர்மூளக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்களிடம் தூது சென்றீர்கள். ஆனால், தூது செல்லக்கூடிய தகுதியே இல்லை என்பது போல் இங்கே வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன. க்ஷத்திரிய வம்சத்தின் பராக்கிரமங்கள், வில்-வாள், தோள்வலியில் தான் இருப்பதாக நிரூபித்து வருகிறார்கள். என் மைந்தர்களுக்கு அவர்கள் யார் என்று தெரிந்துவிட்டது. இனி முடிவெடுக்க வேண்டியது அவர்களே!...”

“போர் இப்போதும் தொடர்ந்திருக்கிறது. ஒரே ஆறுதல்,