பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

வரலாற்றுக்கு முன்


உலகுக்குப் புரியலாயின. இதையே வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் முன் சொன்னபடி நன்கு காட்டுகின்றார். திரு. சட்டர்ஜி அவர்கள் தமிழ்ச் சொற்களின் அமைப்பே அவற்றின் தொன்மையைக் காட்டுவன என விளக்கியுள்ளார்.[1]

தொல்காப்பியர் காலத்தில் வடமொழி வாணர் சிலர் வந்திருக்கக் கூடும் என்றேன். ஆயினும், அவர்கள் கருத்தினையும் கொள்கையினையும் அக்காலத்தில் நாட்டில் புகுத்தியது மிகக்குறைவே. என்றாலும், இன்று வாழ்வாருட் பலர் ஆரியர் பின் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் கொண்டு வந்த பலவற்றை வைத்துக் கொண்டு தொல்காப்பியர் அவர் வழிதான் இலக்கணம் எழுதினார் எனச் சாதிக்க நினைக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் தொல்காப்பியப் பாயிரத்துக்கு விருத்தி உரை எழுதிய ஆசிரியர் சிவஞான சுவாமிகள் நல்ல பதிலைத் தந்துள்ளார்.[2] அதில் ஆசிரியர் ஆரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள அடிப்படை வேற்றுமைகளையெல்லாம் நன்கு அலசிக் காட்டி, தமிழ் இலக்கண அமைப்பே தமிழரது நீண்ட நாள் வாழ்வையும், வரலாற்றையும், பண்பாட்டையும் விளக்க வல்லது என்பதை எடுத்துரைத்து, பொருளதிகாரத்தின் சிறப்பே ஆரிய மொழியின் வேறுபட்ட நிலையை விளக்கும் என்பதைக் குறிப்பிட்டுத் தொல்காப்பியர் வடநூலார் மதம் பற்றி இலக்கணம் செய்தார் எனல் பொருந்தாது எனக் காட்டியுள்ளார். அவர்தம் கருத்தை ஒட்டியும், நச்சினார்க்கினியர் உரை நலம் முதலியவற்றைக் காட்டியும் அறிஞர் வி.கோ.சூ. அவர்கள் வடமொழிக் கலப்பு என்னும் தலைப்பிலே தமிழ் வடமொழி இலக்கண அமைப்பிலிருந்து முற்றும் வேறுபட்ட நிலையை நன்கு விளக்கியுள்ளார்கள்[3].


  1. The Vedig Age, p.159
  2. தொல். பாயிர விருத்தி.
  3. தமிழ் மொழி வரலாறு, பக் 14—26.