பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்

125


என்றாலும், தொல்காப்பியர் அந்த வகையில் சொல்லவில்லை.

'வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.'
(எச்ச .5)

என்ற சூத்திரமே இங்கு எண்ணத்தக்கது. இதிலோ, இதற்கு முன்போ வடசொல் எது என்பதே விளக்கப்பெறவில்லை. வேங்கடத்துக்கு வடக்கே உள்ள நாட்டைக் குறிக்கும் பண்டை ஆசிரியர்கள் 'மொழிபெயர் தேயம்' எனவே குறிக்கின்றார்கள். தெலுங்கை இன்றும் 'வடுகு" என்கின்றோம். எனவே, தொல்காப்பியர் வடமொழி என்றது. தெலுங்கு முதலிய வடதிசைக்கண் வழங்கிய எல்லா மொழியினையும் குறிக்கும். அவற்றை எடுத்து வழங்குவது அக்காலத்தில் தடுக்கப்பெறவில்லை. சிலர் நினைப்பது போலத் தடுக்கவும் இயலாது. எனவே, அதற்கென ஓர் இலக்கணம் தேவைப்பட்டது. அம்மொழிச் சொற்கள் தமிழில் வருமானால் அவற்றைத் தமிழ் மரபு கெடாமல், அவ்வம் மொழி எழுத்துக்களை நீக்கித் தமிழ் எழுத்துக்களால் ஆக்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் என இலக்கணம் வகுத்தார் தொல்காப்பியர். இன்றும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் இந்த முறையையே கையாண்டு வெற்றி பெறுவதை அறிவோம். எனவே, தொல்காப்பியர் காலத்தில் ஆரியர்கள் தமிழ்நாட்டில் இருந்தார்கள் என்று கொண்டாலும் அக்கொள்கைக்கு இச்சூத்திரம் உறுதுணையாகாது எனக் கூறி மேலே செல்லலாம்.

கடவுள் வாழ்த்துப் பற்றித் தொல்காப்பியர் சொல்லுகின்றார். எனவே, ஆரியர் காலத்துக்கு அவர் முற்பட்டவர் அல்லர் என்பர் சிலர். 'கடவுள் வாழ்த்து' உலகில் எல்லா மக்களுக்கும் உரிய ஒன்றாகவே இருந்தது. எகிப்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே கோயில்கள் இருந்தன. மற்றும், அங்கே இறந்தார் உடம்பின்மேல் மணமிக்க மலரையும் பிறவற்றையும் தூவி அந்த இறந்தவர்களை மறு உலகம்